‘மிர்ச்சி’ சிவா நடிப்பில் உருவாகி வருகிறது ‘சூதுகவ்வும் –2’ திரைப்படம். அர்ஜூன் இயக்க, சி.வி. குமார் தயாரிக்கிறார்.
அர்ஜூன் தனது நீண்டநாள் நண்பர் என்றும் இருவரும் ஏற்கெனவே இணைந்து செயல்படத் திட்டமிட்டு இருந்ததாகவும் சொல்கிறார் சிவா.
“அந்த முயற்சி எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. எனினும் ‘சூதுகவ்வும்’ எங்களை இணைத்து வைத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை ‘சூதுகவ்வும்’ என்பது தனி உலகம் எனலாம்.
“அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள், அவர்களது செயல்பாடுகள் என எல்லாமே வித்தியாசமாக இருக்கும். முதல் பாகத்தில் உள்ள அத்தனை சுவாரசியமான அம்சங்களும் இரண்டாம் பாகத்திலும் இருக்கும்.
“என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் குருநாத். கதைப்படி, இந்த குருநாத்தான் சூதுகவ்வும் உலகத்தையே உருவாக்குவார். அந்த உலகத்துக்கு என தனி விதிமுறைகளையும் வகுப்பார்.
“எனது கதாபாத்திரத்தை எழுதும்போதே எனக்குரிய சில அம்சங்களையும் சேர்த்தே எழுதியதாக இயக்குநர் அர்ஜூன் தெரிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளேன்.
“முப்பது வயது இளையர், நரைத்துப்போன தலைமுடி, தாடியுடன் கூடிய 45 வயது ஆடவர் என இரு தோற்றங்களில் நடிப்பது நல்ல அனுபவம். சிறப்பாக நடித்திருப்பதாக படக்குழுவினர் பாராட்டினர்,” என்கிறார் மிர்ச்சி சிவா.
முதல் பாகத்துக்கும் தற்போது உருவாகும் படத்துக்கும் நூறு விழுக்காடு தொடர்பு இருக்குமாம். ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் உள்ளிட்ட பலரும் முதல் பாகத்தில் ஏற்றிருந்த அதே கதாபாத்திரங்களில்தான் இப்போதும் நடிக்கின்றனர். எட்வின் இசையமைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மிர்ச்சி சிவா அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். ‘கலகலப்பு 3’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க அதன் இயக்குநர் சுந்தர்.சி தயாராகிவிட்டாராம். இந்தப் படத்தில் சிவாவுக்கும் முக்கிய கதாபாத்திரம் அமைந்துள்ளது. அடுத்து இயக்குநர் ராம் இயக்கும் புதுப்படத்தில் சிவாதான் கதாநாயகன்.
“திடீரென ஒரு நாள் தொலைபேசியில் தொடர்புகொண்டு என் படத்தின் நாயகன் நீங்கள்தான் என்றார் இயக்குநர் ராம். அவரை நீண்ட காலமாக எனக்குத் தெரியும். பல ஆண்டுகளுக்கு முன்பே என்னை வைத்து ஒருபடம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். அது இப்போதுதான் சாத்தியமாகி உள்ளது.
இதற்கிடையே சிவா நாயகனாக நடித்துள்ள ‘சுமோ’ படம் விரைவில் வெளியீடு காண்கிறது.
ஒரு சுமோ விளையாட்டு வீரர் சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரை நல்லவிதமாகக் கவனித்து அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு நாயகனிடம் ஒப்படைக்கப்படுகிறது.
“சுமோ வீரரின் இந்தப் பயணத்தின்போது நிகழும் சம்பவங்கள்தான் கதையாம். அநேகமாக ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியீடு காண உள்ளது என்கிறார் சிவா.


