“அனைவரும் சேர்ந்து அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்,” என நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் ‘ரோமியோ’ படத்தில் நடித்துள்ளார். மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. பரத் தனசேகர் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
‘ரோமியோ’ படம் அடுத்த மாதம் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் விளம்பர நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ‘ரோமியோ’ படத்தின் கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்டோர் பங்கேற்று படத்தின் இனிமையான நிகழ்வுகள் குறித்துப் பேசினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜய் ஆண்டனி, “காதல் எல்லோருக்கும் ஒன்றுதான். ‘ரோமியோ’ திரைப்படம் திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறது.
“காதல் என்பது ‘2K கிட்ஸ்’, ‘90 கிட்ஸ்’, ‘80 கிட்ஸ்’ என இல்லாமல் காதல் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். அனைத்து வயதினருக்கும் ஒன்றுதான். அன்பு எல்லோருக்குமானது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது அன்புதான்,” என்றார்.
பிற மொழிப் படங்களின் வெற்றி குறித்து கேட்கையில், “பல மொழிகளில் வரும் படங்கள் தமிழ் திரையில் வெற்றி பெறுவது வரவேற்புக்குரியது. மொழிகளைத் தாண்டி படங்கள் வெற்றி அடைவது கலாசார வளர்ச்சி என நினைக்கிறேன்.
“அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கிறார்கள். வரும் எண்ணம் தற்போதுவரை இல்லை. இப்போதைக்கு இந்தப் பட வேலையில் மும்முரமாக இருக்கிறேன். ஒருவேளை அனைவரும் சேர்ந்து அழைத்தால் அரசியலுக்கு வர நான் முயற்சி செய்வேன்.
தொடர்புடைய செய்திகள்
“மக்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கக்கூடிய ஆயுதம்தான் தேர்தல். இந்த நேரத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். முப்பது நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். என்னைக் கேட்டால் தனிப்பட்ட முறையில் நான் நோட்டாவுக்கு ஓட்டுப்போடுவதை வரவேற்பது இல்லை.
“கெட்டதில் நல்லது என்று ஒன்று இருக்கும். எல்லோரும் நோட்டாவுக்கு ஓட்டுப்போட்டால் நாட்டை யார்தான் ஆளப்போகிறார்கள்? கண்டிப்பாக நல்லது என்று ஒருவரை தேர்வு செய்து அனைவரும் ஓட்டளிக்க வேண்டும்.
“தற்போது 60 விழுக்காடு என்ற அளவில்தான் ஓட்டு போடுகிறார்கள். அது குறைந்தபட்சம் 90 விழுக்காடாக மாற வேண்டும். அதைச் செய்யாமல் ‘குத்துதே, குடையுதே’. ‘நாடு சரியில்லையே’! என்று சொல்லக்கூடாது,’’ என்றார்.
அதாவது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் இருப்பதைபோல் நோட்டா எனும் சின்னம் இருக்கும். தொகுதியில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாத நிலையில் நோட்டாவுக்கு நாம் வாக்கு செலுத்தலாம்.
ஆனால், நோட்டாவில் பதிவாகும் வாக்கு என்பது வெறும் எண்ணிக்கை அடிப்படையிலானதுதான். இந்த நோட்டாவில் ஓட்டுப் பதிவு செய்வது என்பது தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இத்தகைய சூழலில்தான் நோட்டாவுக்கு ஓட்டளிக்கக்கூடாது என இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.