தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிர்ச்சி சிவா: என் வழி தனிவழி

3 mins read
6db662a1-b8f0-47e7-afde-a0c2b66f09b7
மிர்ச்சி சிவா. - படம்: ஊடகம்

எனக்கு எது சரிப்படுமோ அதுபோன்ற படங்களைத்தான் தேர்ந்தெடுப்பேன். என் வழி தனி வழி என்கிறார் மிர்ச்சி சிவா.

‘சென்னை 28’ல் நடித்தவர்தான் ‘மிர்ச்சி’ சிவா. இவர் நடிக்கும் ‘தமிழ்ப் படங்கள்’ சாதாரணமான மசாலா படங்கள் போல் இல்லாமல் ‘சொன்னால் புரியாத’ ரகளையான ‘தில்லுமுல்லு’வாக இருக்கும்.

இவரின் படங்கள் ஒரு ரகம் என்றால், இவரது குழு ‘144’ சட்டம் போட்டாலும் வா ‘பார்ட்டி’ பண்ணலாம் என்று சொல்லும் ஜாலி ரகம். வெளியில் ஜாலியாக இருக்கும் சிவா, அவரது பெசன்ட் நகர் அலுவலகத்தில் இருக்கும்போது பக்தியாகத்தான் இருப்பார்.

‘சூது கவ்வும் 2’ படத்தில் நடித்தது பற்றி அவர் கூறுகையில், ‘சூது கவ்வும்’, நாம் அனைவரும் ரசித்த படம். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது, மிகவும் கவனமாக இருக்கணும்.

“இயக்குநர் அர்ஜுனும் தயாரிப்பாளர் சி.வி.குமாரும் என்னிடம் இந்தப் படம் பற்றி சொன்னபோது அவர்களிடம் ‘நான் ஏன் இந்தப் படத்தில்?’ என்று கேட்டேன். ஆனால், அர்ஜுன் சொன்ன கதைதான், இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தது.

“அர்ஜுன் என் பழைய நண்பர். முன்பே நாங்கள் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டியது. அப்போது அது ஒரு சில காரணங்களால் நின்று போனது. தற்பொழுது இந்தக் கதையைக் கேட்டதும் நடிக்க ஒத்துக்கொண்டேன்.

‘சூது கவ்வும்’ ஒரு தனி உலகம் என்று சொல்லலாம். அந்தப் படத்தில் இருந்த கதாபாத்திரங்கள், அவர்கள் செய்யும் வேலைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கும்.

‘‘முதல் பாகத்தில் இருந்த அத்தனை இனிமையான விஷயங்களும் இந்தப் படத்திலும் இருக்கின்றன. இந்தப் படம் இரண்டு காலகட்டங்களில் நடப்பதுபோல் எடுத்திருக்கிறார்கள்.

“ஒன்று ‘சூது கவ்வும்’ முதல் பாகத்திற்கு முன்பு நடக்கும் கதை. மற்றொன்று ‘சூது கவ்வும்’ முதல் பாகத்திற்குப் பிறகு நடக்கும் கதை.

இதில் நான் குருநாதர் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அந்தக் கதாபாத்திரம்தான் இந்த ‘சூது கவ்வும்’ உலகத்தையே உருவாக்கும். சட்ட திட்டம் அனைத்தும் அவர் உருவாக்குவதுதான். என் கதாபாத்திரம் எழுதும்போதே, எனக்கான அம்சங்களையும் சேர்த்தே இயக்குநர் எழுதியிருந்தார்.

“அதனால் அந்த உலகத்துக்குள் என்னை ஒருத்தனாக மாற்றுவதற்கு எனக்கு சிரமமாக இல்லை. இரண்டு காலகட்டம் என்பதால் எனக்கும் இரண்டு வேடங்கள். ஒன்று 30 வயது ஆள். மற்றொன்று முடி, தாடி நரைத்துப்போன 45 வயசு ஆள். இரண்டுமே ரொம்ப அருமையாக வந்திருக்கிறது.

‘சூது கவ்வும்’ படத்தின் மிகப்பெரிய பலமே நலன் குமாரசாமியின் கதையும் அதில் நடித்த நடிகர்களும்தான். ஆனால், இரண்டாம் பாகம் வேறு ஒருவரின் கதை, நடிகர்களில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா இந்தப் படத்தில் கிடையாது.

“முதல் பாகத்தின் தொடர்ச்சி இதில் 100 விழுக்காடு இருக்கும். அந்தப் படத்தின் தொடர்ச்சி இருந்ததால்தான் நடிக்க ஒத்துக்கொண்டேன். அதுமட்டுமல்லாமல் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், ரமேஷ் திலக், அருள்தாஸ், ‘பில்லா’ யோக் ஜேபி என்று முதல் பாகத்தில் இருந்த பல நடிகர்கள் இந்தப் பாகத்திலும் நடித்திருக்கிறார்கள்.

‘சூது கவ்வும்’ முதல் பாகத்திற்கு சந்தோஷ் நாராயணனின் இசை மிகப்பெரிய பலமாக இருந்தது. அதே மாதிரியான அருமையான இசையை எட்வின் என்ற ஓர் இசையமைப்பாளர் கொடுத்திருக்கிறார். நான் சொன்னதைத் தாண்டி படத்தில் பல திருப்பங்களும் விறுவிறுப்பான காட்சிகளும் இருக்கின்றன.

‘சென்னை 28’, ‘தமிழ்ப் படம்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களின் இரண்டு பாகங்களிலும் நடித்திருக்கிறேன்.

முதல் பாகம் மாதிரி இருக்கும் என்று நம்பி படம் பார்க்க வருபவர்களை ஏமாற்றக்கூடாது. அதனால் இரண்டாம் பாகத்தின் கதையில் மிகவும் கவனமாக இருப்பேன்.

“அப்படி இருந்ததால்தான் இதற்கு முன்பு நான் நடித்த மூன்று படங்களுமே வெற்றியடைந்தன. அந்த வரிசையில் ‘சூது கவ்வும் 2’ படமும் இருக்கும்.

“உங்களுக்கு மற்றொரு சுவாரசியமான செய்தியைச் சொல்கிறேன். இயக்குநர் சுந்தர்.சி ‘கலகலப்பு 3’ படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டதாகவும் கதையைக் கேட்க என்னை வரச் சொல்லி இருக்கிறார். அந்தப் படத்திலும் விரைவில் நடிப்பேன் என்று நினக்கிறேன்,” என்று கூறினார்.

‘சூது கவ்வும் 2’ படம் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி