விஜய் தேவரகொண்டா: எனக்கு பட்டப் பெயர் வேண்டாம்

விஜய் தேவரகொண்டா: எனக்கு பட்டப் பெயர் வேண்டாம்

2 mins read
e4f27142-b50d-4149-a747-4908bfbbd544
விஜய் தேவரகொண்டா. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

என் பெற்றோர் வைத்த பெயரை உச்சரிக்கும்போது இனிமையாக இருக்கிறது. அதனால் எனக்கு பட்டப்பெயர் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா.

சினிமாவைப் பொறுத்தவரை தொடர்ந்து மூன்று, நான்கு படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து விட்டால் அடுத்ததாக அவர்கள் பெயருக்கு முன்னால் தானாகவே ஒரு பட்டம் சேர்ந்து கொள்ளும்.

ரசிகர்கள் அன்பாக கொடுத்தார்கள், தயாரிப்பாளர்கள் விரும்பினார்கள் என காரணம் சொல்லிக்கொண்டு சம்பந்தப்பட்ட நடிகர்களும் ஆர்வத்தோடு தங்களுக்கு பட்டம் சூட்டிக் கொள்வார்கள்.

இப்படி வளர்ந்து வந்த காலத்தில்தான் நடிகர் பரத் ‘சின்ன தளபதி’ என்றும் விஷால் ‘புரட்சி தளபதி’ என்றும் பட்டப்பெயர் போட்டுக் கொண்டதும் சில படங்களிலேயே அந்த பட்டப் பெயரை தூக்கி விட்டு அமைதியாகிவிட்டதும் பலரும் அறிந்ததே.

இப்படி எல்லாம் தனக்கு அடைமொழி எதையும் வைத்துக் கொள்ளாமல் அதே சமயம் தன்னைப் பற்றி குறிப்பிடும்போது ‘தி விஜய் தேவரகொண்டா’ என்ற சிறிய அடைமொழி மட்டுமே இடம்பெறுமாறு பார்த்துக் கொள்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

இதுகுறித்து அண்மையில் ‘பேமிலி ஸ்டார்’ விளம்பர நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, “எனக்கு பிடித்த ‘தலைவா’, ‘தளபதி’, ‘தல’ என எல்லா பட்டங்களும் ஏற்கெனவே ஒவ்வொருவருக்கும் சொந்தமாகிவிட்டன,” என்று நகைச்சுவையாக கூறினார்.

“உண்மையில் என்னுடைய அப்பா அம்மா வைத்த அந்தப் பெயரை உச்சரிக்கும்போது மட்டுமே இனிமையாக இருக்கிறது. அதனால் அந்தப் பெயரை மறைக்கும் விதமாக வேறு எந்த பட்டமும் எனக்குத் தேவையில்லை. இந்தப் பெயரின் கம்பீரத்தை கூட்டும் விதமாக ‘தி’ என்கிற சிறிய வார்த்தையை மட்டும் சேர்த்துக் கொண்டேன்,” என்று கூறியுள்ளார் தி விஜய் தேவரகொண்டா.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி