கர்நாடக திரையரங்கு உரிமையை அதிக விலைக்கு ‘இந்தியன் 2’ திரைப்படம் விற்கப்பட்டுள்ளது.
1996ல் ‘இந்தியன்’ படம் கர்நாடகாவில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யாமலே அங்கு படம் பல வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இதனால், ‘இந்தியன் 2’ படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்க போட்டி நிலவியது.
தற்போது ‘இந்தியன் 2’ படத்தின் கர்நாடக திரையரங்கு விநியோக உரிமையை ‘ரோமியோ பிக்சர்ஸ்’ வாங்கியுள்ளது. இவர்கள் கன்னடத்தின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும்.
இதுவரை வெளியான தமிழ்ப் படங்களைவிட அதிக தொகைக்கு இந்த உரிமை வாங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கர்நாடக உரிமை அதிக தொகைக்கு விற்கப்பட்ட தமிழ்ப் படம் என்ற சாதனையை, வெளியாகும் முன்பே, ‘இந்தியன் 2’ படைத்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் மே 24ம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.