நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில் ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் ‘பேமிலி ஸ்டார்’.
இந்தப் படம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா பல விளம்பர நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேட்டியளித்த போது, “ அனுபவம் இல்லாத புதுமுக இயக்குநர்களுடன் பணிபுரிய தனக்கு விருப்பமில்லை. தான் பணிபுரியும் இயக்குநர் அதற்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு படமாவது இயக்கி இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
“என்னதான் உதவி இயக்குநராக இருந்திருந்தாலும் இயக்குநராகும் போது இருக்கும் சூழல் வேறு. களத்தில் பல விஷயங்கள் சவாலாக இருக்கும். படத்திற்கான பொருட்செலவை சமாளிப்பது பெரிய விஷயம். இந்த அழுத்தங்களை எல்லாம் அவர்கள் முன்பு கையாண்டிருப்பது அவசியம்,” என்றார் விஜய் தேவரகொண்டா.
“இயக்குநர் என்னை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது எல்லாவற்றையும் கவனித்துதான் இயக்குநரை நான் தேர்வு செய்வேன்,” என்று விஜய் தேவரகொண்டா தெளிவுபடுத்தினார்.
‘தி பேமிலி ஸ்டார்’ தெலுங்கு ,தமிழ் மொழியில் வெளியாகுகிறது. பெரிய அளவில் செலவு செய்து படங்கள் தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ளது. பரசுராம் பெட்லா படத்தை இயக்கி உள்ளார். கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
“என் நடிப்பில் வெளியான முதல் படத்துக்கு அளித்த ஆதரவு என்றும் மறக்க முடியாது. தற்போது மீண்டும் இயக்குநர் பரசுராமுடனும் தயாரிப்பாளர் தில் ராஜுடனும் இணைந்து ‘தி பேமிலி ஸ்டார்’ படத்தில் நடித்து உள்ளேன். இந்தப்படத்தில் நடுத்தர குடும்ப இளைஞர் வேடத்தில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் புதுவித பாணியை கடைபிடித்து உள்ளேன். இது ரசிகர்களுக்கு பிடிக்கும்,” என தெரிவித்தார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தமிழ் இயக்குநர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினார்.விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா தனக்கு பட்டப் பெயர் வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
“எனக்கு பிடித்த ‘தலைவா’, ‘தளபதி’, ‘தல’ என எல்லா பட்டங்களும் ஏற்கெனவே ஒவ்வொருவருக்கும் சொந்தமாகிவிட்டன,” என்று நகைச்சுவையாக கூறினார்.
“உண்மையில் என்னுடைய அப்பா அம்மா வைத்த அந்தப் பெயரை உச்சரிக்கும்போது மட்டுமே இனிமையாக இருக்கிறது. அதனால் அந்தப் பெயரை மறைக்கும் விதமாக வேறு எந்த பட்டமும் எனக்குத் தேவையில்லை. இந்தப் பெயரின் கம்பீரத்தை கூட்டும் விதமாக ‘தி’ என்கிற சிறிய வார்த்தையை மட்டும் சேர்த்துக் கொண்டேன்,” என்று கூறியுள்ளார் தி விஜய் தேவரகொண்டா.

