கார் விபத்தில் அஜித் சிக்கிய பயங்கரம்; திகிலுடன் விவரிக்கும் மேலாளர் சுரேஷ் சந்திரா

கார் விபத்தில் அஜித் சிக்கிய பயங்கரம்; திகிலுடன் விவரிக்கும் மேலாளர் சுரேஷ் சந்திரா

2 mins read
f18d2363-5198-4eb0-87ff-c7151beb4b98
(இடமிருந்து) விபத்தில் சிக்கி கவிழ்ந்து கிடக்கும் கார். விபத்துக்கு முன் காரை ஓட்டிக்கொண்டிருக்கும் நடிகர் அஜித். அருகில் நடிகர் ஆரவ். - படங்கள்: ஊடகம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பின்போது அஜித் எவ்வாறு விபத்தில் சிக்க நேர்ந்தது என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அஸர்பைஜான் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் இப்படத்துக்காக கார் துரத்தலுடன் கூடிய ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்கி உள்ளனர்.

இதற்காக அஜித் ஓட்டிய காருக்குள் ஒரு கேமரா பொருத்தப்பட்டதாம். மேலும் ஆள் இல்லா சிறிய வானூர்தியும் (டிரோன்) பயன்படுத்தப்பட்டுள்ளது.

“சண்டைக் காட்சிக்காக அஜித் தனது காரை வேகமாக இயக்கியபோது யாரும் எதிர்பாராதவிதமாக அது வழுக்கிச் சென்றது. பின்னர் அது உருண்டு அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது.

“அஜித்துக்கு என்னவானது என்று அனைவருமே பதறிப்போனோம். முதற்கட்டமாக அவர் விபத்தை எதிர்கொண்டதாக மட்டுமே சென்னையில் இருந்த எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

“அதனால் பதற்றம் அதிகரித்த நிலையில் அஜித் தாமாக எங்களை தொடர்புகொண்டார். ‘ஹம்மர்’ காரை ஓட்டியதால் தமக்குப் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று குறிப்பிட்டார்.

“உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பு ஏதும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பும் தொடங்கியது,” என்று அஜித்தின் மேலாளார் சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு 60 விழுக்காடு அளவுக்கு முடிந்துவிட்டது என்றும் இரண்டு பாடல் காட்சிகளை விரைவில் படமாக்க உள்ளனர் என்றும் சுரேஷ் சந்திரா மேலும் கூறியுள்ளார்.

முன்பே திட்டமிட்டபடி வரும் அக்டோபர் மாதம் ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியீடு காணும் என்றும் அவரது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘விடா முயற்சி’ படத்துக்கான சண்டைக் காட்சிகளில் அஜித் பலமுறை ‘டூப்’ போடாமல் நடித்திருப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், அவர் கார் விபத்தில் சிக்கியுள்ளார். அக்காட்சியில் அவருடன் இணைந்து நடித்த நடிகர் ஆரவ்வும் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியுள்ளார்.

இதையடுத்து அஜித் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இதுபோன்ற ஆபத்தான முயற்சிகள் கூடாது என்றும் அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்