தனது 28வது பிறந்தநாளைக் (ஏப்ரல் 5) கொண்டாடி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல தெலுங்குப்பட நடிகர் விஜய் தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில், இருவரும் இணைந்து அபுதாபியில் பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்கள், காணொளிகளை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
தமிழில் ‘சுல்தான்’, ‘வாரிசு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் பிரபல நடிகையாக கல்லா கட்டி வருகிறார்.
அவர் தற்போது ‘புஷ்பா 2’, ‘ரெயின்போ’, ‘கேர்ள்ஃப்ரண்ட்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதே போல் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ‘குபேரா’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘புஷ்பா 2’ படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகாவின் தோற்றத்தை அவரது பிறந்தநாளை ஒட்டி படக்குழு வெளியிட்டுள்ளது.
அதில் நகைகள் அணிந்து, கையை கண்ணுக்கு அருகில் வைத்தபடி அசத்தலாக காட்சி தருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் டீசர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளான ஏப்ரல் 8ம் தேதி அன்று (நாளை) வெளியிடப்பட உள்ளது.
ராஷ்மிகா ஒரு படத்திற்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் ஆடம்பர வீடு, சொகுசு கார்கள் என ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
சினிமாவைத் தவிர பல்வேறு விளம்பரங்கள் மூலமும் நல்ல வருமானம் ஈட்டி வரும் ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு ரூ.50 கோடியாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அவருக்கு நாடு முழுவதும் உள்ள முக்கிய பெருநகரங்களில் ஆடம்பர பங்களாக்கள் உள்ளன. பெங்களூரில் ரூ.8 கோடி மதிப்புள்ள பங்களா, மும்பையில் அடுக்குமாடி வீடு, கோவா, கூர்க், ஹைதராபாத் ஆகிய இடங்களில் வீடுகளும் உள்ளன.
இவற்றைத் தவிர, பல கோடிக்கணக்கில் ஆடி கியூ3 சொகுசு கார், ரேஞ்ச் ரோவர் ஆடம்பரக் கார், மெர்சிடிஸ் பென்ஸ், டொயோட்டா இன்னோவா, ஹுயுண்டாய் கிரேட்டா ஆகிய கார்களையும் ராஷ்மிகா வைத்திருக்கிறார். தனது நடிப்பில் இருந்து அடிக்கடி ஓய்வு எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள ராஷ்மிகா, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் சென்று வருகிறார். மாலத்தீவு, துருக்கி, லண்டன், அமெரிக்கா, கத்தார், டென்மார்க், சுவீடன் மற்றும் பல இடங்களுக்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதனிடையே, ரன்பீர் கபூருடன் இவர் நடித்த ‘அனிமல்’ இந்திப் படம் சர்ச்சையில் சிக்கியதை அடுத்து, விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராஷ்மிகா.
“பெண்களைச் சிலர் உருவக்கேலி செய்கின்றனர். எனது கதாபாத்திரம் பற்றியும் அவதூறாகப் பேசினர். எனது முகம் நன்றாக இல்லை, நடிப்பு சரியில்லை, வசனங்கள் புரியவில்லை என்றெல்லாம் கேலி செய்தனர்.
“மற்றவர்களின் உப்புசப்பற்ற விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படுவது இல்லை,’’ எனத் தெரிவித்துள்ளார்.