தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘அன்றும் இன்றும் என்றும் நீங்கள்தான் எனக்கு ஆதரவு’

3 mins read
8cf80039-3b6f-436b-809f-52edd2d85969
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

“என்னுடைய கஷ்டமான காலங்களில் ரசிகர்களாகிய நீங்கள்தான் எப்போதும் ஆதரவு தருகிறீர்கள்,” என்று உருக்கமாகவும் கண்ணீருடனும் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.

சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் விளங்குகிறார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடகராகவும் மிமிக்கிரி செய்பவராகவும் தொகுப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் பன்முகத் திறமை கொண்டவராகவும் திகழ்கிறார்.

இந்த நிலையில் அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதே நேரத்தில் சிவகார்த்திகேயன் குறித்து சில சர்ச்சைகளும் அவ்வப்போது வெடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் `எஸ்.கே.23.’ , ‘அமரன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் `எஸ்.கே.23.’ படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடந்து வருகிறது. காரணம், `எஸ்.கே.23.’ படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இவர் இந்தப் படத்தையடுத்து சல்மான் கானை வைத்து இந்தியில் படம் இயக்க இருக்கிறார்.

அதனால் விரைவில் சிவகார்த்திகேயனின் படத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக இரவு பகல் பாராமல் படப்பிடிப்பு நடத்திக்கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ‘அமரன்’ படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

‘அமரன்’ படத்திற்காக சிவகார்த்திகேயன் கட்டுமஸ்தாக காட்சியளிக்கிறார். கட்டுறுதியான உடம்பும் மிடுக்கான தோற்றமும் வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி பயிற்சியாளர் சந்தீப்புடன் கைகோத்துள்ளார் சிவா.

இதற்கு முன் சிம்புவை கட்டுமஸ்தானாக ஆக்கிய பயிற்சியாளர் இவர். சந்தீப்பின் வழிகாட்டுதலில் ஆக்‌ஷன் நாயகனாகத் தயாராகிவிட்டார் சிவா.

இரண்டு படங்களையும் விரைவில் முடிக்க வேண்டும் என்றுதான் சிவகார்த்திகேயன் அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.

சிவா நடித்து வரும் ‘அமரன்’ படம், மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு பற்றிய கதை.

சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவமான படமாக இது தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் சிவா நடித்துள்ளார்.

மேஜர் கதாபாத்திரத்திற்காக தன் உடல் எடையை அதகரித்ததோடு உடம்பையும் கட்டுக்கோப்பாக்கி வைத்துள்ளார்.

படப்பிடிப்புக்கு நடுவிலும் தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். சிவகார்த்திகேயனோடு இணைந்து சாய்பல்லவி நடிக்கிறார்.

அவரது கடுமையான உடற்பயிற்சி வீண் போகவில்லை. இந்தப் படத்திற்காக தன்னைத் தயார் செய்யும் உடற்பயிற்சி பற்றிய காணொளி ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார் சிவகார்த்திகேயன். அவருடைய கடுமையான உடற்பயிற்சிகளைப் பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்தத் திரைப்படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ‘அமரன்’ படத்தின் சுவரொட்டி வெளியானதுமே திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று சிலர் வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர்.

ஏற்கெனவே ‘அமரன்’ பெயரில் நடிகர் கார்த்திக் நடிப்பில் 1992ஆம் ஆண்டு திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த சர்ச்சைகளால் சிறிது மனம் வருந்தியதாகப் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

அதே நேரத்தில் இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன், “மேஜர் முகுந்த் வரதராஜனாக நான் நடித்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன். தைரியம் மற்றும் வீரம் கொண்ட பயணத்திற்கு எல்லோரும் தயாராகுங்கள்,” என்று ஒரு பதிவையும் வெளியிட்டு இருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் இமான் சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து சிவகார்த்திகேயன் எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை.

இப்படியான நிலையில் அண்மையில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து சிவகார்த்திகேயன் பேசியிருந்தார்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன், “என்னுடைய சினிமா வாழ்க்கையில் அதிகப்படியான பிரச்சினைகள், வலிகள் உள்ளன. அதனைப் பகிர்ந்துகொள்ள எனக்கு அப்பாவோ அண்ணனோ இல்லை. ஆனால், அதுபோன்ற நேரங்களில் எனது ரசிகர்களாக நீங்கள் என்னுடன் இருந்தீர்கள். இன்னும் இருப்பீர்கள்,” என்று கண்கலங்கியபடி ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி உருக்கமுடன் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தக் காணொளி தற்பொழுது இணையத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி