விமரிசையாக நடந்தேறிய அமலா பாலின் வளைகாப்பு

விமரிசையாக நடந்தேறிய அமலா பாலின் வளைகாப்பு

2 mins read
d9e8c6a0-d738-485a-9a43-6bb521d8415b
அமலா பால், ஜெகத் தேசாய் - படம்: ஊடகம்

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத நடிகையான அமலா பால் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்.

விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த அமலா பாலுக்கு ஆரம்பத்தில் படவாய்ப்பு சரியாக அமையாததால் மன அழுத்தத்தில் இருந்தார்.

அதனால் நண்பர்களுடன் குடிப்பது, ஆட்டம், பாட்டம் என வரம்பு மீறி நடந்து கொண்டு பெயரை கெடுத்துக்கொண்டார். தொடர்ந்து படங்கள் இல்லாததால், ‘கேடவர்’ என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருந்தார். அந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓரளவுக்குப் பாராட்டை பெற்றது.

‘கேடவர்’ படத்தைத் தொடர்ந்து அவருக்கு ஓரளவு படவாய்ப்பு வந்தது. மலையாளத் திரைப்படமான ‘ஆடு ஜீவிதம்’ என்ற படத்தில் பிருத்விராஜ் மனைவியாக நடித்துள்ளார்.

இப்படத்தில், ‘லிப் லாக்’ காட்சியில் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளாத அமலா பால், நிர்வாணமாகவே நடித்துவிட்டேன், இதெல்லாம் ஒரு விஷயமா என்று பதில் அளித்து அனைவரின் வாயையும் அடைத்தார். அந்தப் படம் தற்போது வெளியாகி வசூலை அள்ளி வருகிறது.

நடிகை அமலாபால், சென்ற ஆண்டு தன்னுடைய பிறந்த நாளன்று தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக புகைப்படத்துடன் அறிவித்தார். இதையடுத்து, ஒரே வாரத்தில் அவரைத் திருமணமும் செய்துகொண்டார்.

அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடியின் திருமணம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால்.

இந்நிலையில், அமலா பாலுக்கு கேரளாவில் பாரம்பரிய முறைப்படி குடும்பத்தினரின் முன்னிலையில் நேற்று முன்தினம் வளைகாப்பு விழா நடைபெற்றது.

அதில், அமலா பால் தன்னுடைய கணவர் ஜெகத் தேசாயுடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி