தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல சிக்கலுக்குப் பின் தயாராகிய ‘வணங்கான்’

2 mins read
7a3d4674-6d55-44c4-8ea3-8919a6401a95
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் முடிவடைந்தது. - படம்: சமூக ஊடகம்

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 12ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமூக ஊடகங்கள் வழி தகவல் வெளியிட்டுள்ளார்.

‘அமைதிப்படை 2’, ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரோடெக்சன்ஸ் ‘வணங்கான்’ படத்தைத் தயாரித்துள்ளது.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் பாலா தமது வித்தியாசமான பாணியில் இயக்கியுள்ளார்.

அருண் விஜய் - பாலா கூட்டணியில் முதல் முறையாக உருவாகி வரும் படம் என்பதாலேயே ‘வணங்கான்’ படம் குறித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த எதிர்பார்ப்புக்குத் தீனி போடும் வகையில், ஏற்கெனவே ‘வணங்கான்’ படத்தின் முதல் ‘போஸ்டர்’ வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

மேலும் அண்மையில் படத்தின் ‘டீசர்’ வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிக அளவில் தூண்டியது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள, சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகப் பணியாற்ற, கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார்.

விரைவில் படம் வெளியாகும் தினம் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு பல சிக்கல்களுக்குப் பிறகு வெற்றியுடன் முடிவடைந்துள்ளது.

படத்துக்குப் பூசை போட்ட நாள் முதல் இதுவரை ஏதாவது சிக்கல் எழுந்தபடியே உள்ளது. இந்தப் படத்தில் முதலில் சூர்யாவும் கிரித்தி ஷெட்டியும்தான் நாயகன், நாயகியாக ஒப்பந்தமாகினர்.

சில நாள்கள் கடந்த நிலையில், திடீரென சூர்யா இப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து கிரித்தி ஷெட்டியும் படக் குழுவிடம் மன்னிப்புக் கோரி, படத்திலிருந்து விலகினார்.

இதையடுத்து, மலையாள நடிகையான மமிதாவை பாலா அணுகினார். ஆனால் பாலா, மமிதாவை அடித்து துன்புறுத்தியதாகத் தகவல் வெளியாகியது.

அதன்பின்னர் அருண் விஜய்யும் ரோஷினியும் இப்படத்தில் இணைந்தனர்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானாலும் ரோஷினி நடித்திருப்பது மொத்தம் 10 படங்கள்தான். ‘வணங்கான்’ பாலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் என்பதால் நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு தனக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் கிடைக்கும் என்று நம்புகிறார் ரோஷினி.

அதேபோல் அருண் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக ‘வணங்கான்’ இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

‘வணங்கான்’ படத்தில் கடின உழைப்பை அருண் விஜய் வெளிப்படுத்தி உள்ளதாகவும் சினிமா கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்