தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்தவுள்ள வெற்றிமாறன்

2 mins read
85d4796b-25a0-49e8-a7b5-fbadbbdc6ebc
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் திரைப்படம் ‘வாடிவாசல்’ - படம்: சமூக ஊடகம்

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் புது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளதால் அடுத்து ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

‘வாடிவாசல்’ திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானபோதிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று அதற்கான புகைப்படங்களும் வெளியாகின.

நடிகர் சூர்யாவும் இந்தப் படத்துக்காக காளையுடன் பயிற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அதன் பிறகு படம் குறித்த எந்த செய்தியும் வெளியாகவில்லை.

அடுத்தடுத்து ‘கங்குவா’, ‘புறநானூறு’, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் குறித்த அறிவிப்புகளை சூர்யா வெளியிட்டார். ஆனால், ‘வாடிவாசல்’ குறித்து அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதனால் படம் கைவிடப்பட்டதாகவும், சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றிமாறனிடம் ரசிகர் ஒருவர், ‘வட சென்னை 2’ எப்போது தயாராகும் எனக் கேட்டார்.

அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், “நான் எடுத்து முடித்த ‘விடுதலை 2’ படத்தின் வெளியாகும் நாள் எப்போது என்று எனக்குத் தெரியாது. இந்தப் படம் முடிந்த பின் ‘வாடிவாசல்’ பட வேலைகள் உள்ளன. அதன்பிறகு தான் வேறு என்ன படத்தை இயக்கப்போகிறேன் என்பது எனக்குத் தெரியும். அதனால் ‘வட சென்னை 2’ எப்போது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்றார்.

இதன் மூலம் அவர் அடுத்ததாக ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்த இருப்பது உறுதியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்