உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் வாழ்க்கை திரைப்படமாகத் தயாராகிறது. இதன் பணிகள் பூஜையுடன் தொடங்கின. இப்படத்தை ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ பட நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிறுவனம் ஏற்கெனவே காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்டு, தமிழக அரசின் சிறப்பு விருதினை வென்றது.
‘காமராஜ்’ படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய செம்பூர்.கே.ஜெயராஜ் திருவள்ளுவர் படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார். ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
இதில் திருவள்ளுவராக கலைச்சோழனும் அவரது மனைவி வாசுகியாக தனலட்சுமியும் நக்கீரனாக சுப்பிரமணிய சிவா, பாண்டிய மன்னனாக ஓஏகே சுந்தர் ஆகியோர் நடிக்கின்றனர்.
படம் குறித்து இயக்குநர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “இமாலயக் கருத்துகளை ஈரடியில் எளிதாகச் சொல்லிவிடுகிறது திருக்குறள். ஆனால், திருக்குறளின் உள்ளார்ந்த சுவையை, அதன் உயிர்த் துடிப்பை மூன்று மணி நேர திரைக்கதைக்குள் அடக்குவது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை படத்துக்கான கதையை எழுதும்போதுதான் உணர முடிந்தது.
“திருவள்ளுவரோடு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாட்டையும் இத்திரைப்படத்தில் பதிவு செய்ய உள்ளோம்.
“மூவரசோடு, வேணாடு, பூழிநாடு, பன்றிநாடு, அருவாநாடு, வள்ளுவநாடு என பல்வேறு சிற்றரசுகள் குறித்தும் தமிழ் அறிஞர்களுக்கிடையே நிகழ்ந்த வீரம் செறிந்த போர்க்களக் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெறுகின்றன.
“அன்றைய தமிழர்களின் பண்பாடு, தொழில், வணிகம் என வாழ்வியல் குறித்தும் இத்திரைப்படம் அலசவிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“அதோடு சங்க கால ஐந்து நில மாந்தர்களும் இத்திரைப்படத்தில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர். அனைத்து மொழிகளிலும் இத்திரைப்படத்தை துணை தலைப்புகளோடு உலகெங்கும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

