எந்த ஒரு விமர்சனமும் தன்னைப் பாதிக்காத வகையில் ஒரு பாதுகாப்பு அரணாக நின்று தனது கணவரும் பெற்றோரும் தன்னைக் காத்து வருவதாக தெரிவித்துள்ளார் நடிகை பிரியாமணி.
பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் பிரியாமணியும் ஒருவர். பாரதிராஜா இயக்கிய ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தொடர்ந்து ‘பருத்தி வீரன்’ படத்தில் தேசிய விருதைப் பெற்று தமிழ்த் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் பிரியாமணி.
தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ள பிரியாமணியின் நடிப்பில் இவ்வாண்டு இரு படங்கள் வெளிவந்துள்ளன.
யாமி கெளதம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளான ‘ஆர்ட்டிகிள் 370’ படத்தில் பிரியாமணியின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ‘மைதான்’ படத்தில் நடித்திருப்பதன் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார் பிரியாமணி.
இந்நிலையில், தனது சொந்த வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட விமர்சனங்கள் தன்னை எப்படிப் பாதித்தது என்பது குறித்து பிரியாமணி ‘கலாட்டா ப்ளஸ்’ ஒளிவழிக்கு பேட்டி அளித்துள்ளார்.
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டபோது தன்மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து பிரியாமணி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
“கடந்த 2017ல் முஸ்தஃபா ராஜ் என்கிற தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டேன். ஏற்கெனவே ஆயிஷா என்பவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் முஸ்தஃபா ராஜ்.
”எனது திருமணத்தைத் தொடர்ந்து என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் என்னை அதிகம் பாதித்தன.
“என்னை மட்டுமன்றி என் பெற்றோரையும் இந்த விமர்சனங்கள் பாதித்தன. ஆனால், எல்லா பிரச்சினைகளுக்கும் இடையில் என் கணவர் என்னுடன் உறுதியாக நின்றார்.
“எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் முதலில் என்னைக் கடந்துதான் அது உன்னிடம் வரவேண்டும்,” என என் கணவர் பாதுகாப்பு அரணாக ஒரு பாறை போல என் பக்கம் நின்றார்.
அந்த சமயத்தில் நானும் அவரிடம், “எனக்காக நில்லுங்கள், என்னை நம்புங்கள் என்றேன். காரணம் மீதமிருக்கும் வாழ்க்கையை நாங்கள் ஒன்றாக இணைந்து வாழ முடிவெடுத்து இருந்தோம். அதில் மழை, புயல், வெயில் என எது வந்தாலும் நாம் ஒன்றாக அந்தப் பாதையில் நடப்போம் என்று சொன்னேன்.
“அத்தகைய புரிதல் கொண்ட, வலுவான துணை எனக்கு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியே. எல்லாவற்றையும் சமாளிப்பது எப்படி என்று அவருக்குத் தெரியும்,” எனத் தெரிவித்தார்.
“அதேநேரம் இந்த விமர்சனங்கள் என் பெற்றோரை பாதிக்காமல் இருக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்தோம். அவர்களின் ஆசீர்வாதம்தான் எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது,” என்று பிரியாமணி தெரிவித்துள்ளார்.
“பொதுவாக நடிகைகளுக்குத் திருமணம் நடந்துவிட்டால் ரசிகர்கள் குறைந்துவிடுவார்கள். திருமணமான நடிகை என்றாலே அவரால் நாயகியாக நடிக்கமுடியாது என்ற எண்ணம்தான் அதற்குக் காரணம்.
“அதுமட்டுமன்றி திருமணமான நடிகைகள் அண்ணி, அம்மா பாத்திரங்களில் நடிக்க கவனம் செலுத்துவார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. திருமணம் செய்து கொண்ட நடிகைகளும் நல்ல நல்ல பாத்திரங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்கள்,” எனக் கூறியுள்ளார் பிரியாமணி.
தமிழ், தெலுங்கு மொழி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்காதது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியாமணி, “அதற்கு இப்போது வரை எனக்கு விடை கிடைக்கவில்லை.
“இந்தக் கேள்வியை தயாரிப்பாளர்களிடமும் இயக்குநர்களிடமும் தான் கேட்கவேண்டும். நான் முன்னணி நாயகன்களுடன் சேர்ந்து நடித்தாலோ அல்லது அவர்களது எதிரில் நின்று நடித்தாலோ அவர்களை நான் நடிப்புத் திறமையால் வென்றுவிடுவேன் என்று நினைக்கிறார்களாம். இதைத்தான் நான் நீண்ட காலமாக கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
“ஆனால், அதில் உண்மை இல்லை என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் உண்மையான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியவில்லை.
“காரணம் என்னவாக இருந்தாலும் நான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கிறேன், இதைவிட வேறு என்ன வேண்டும்?” என்று கேட்டுள்ளார் பிரியாமணி.