திரைப்படங்களைத் தள்ளி வெளியிடச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மீது நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் குறித்து பேசிய விஷால், “எனது ‘எனிமி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியானபோது ஒரு விஷயம் நடந்தது. ஆனால் அது உதயநிதிக்குத் தெரியுமா? தெரியாதா? என்று எனக்குத் தெரியவில்லை.
“ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நபருடன் எனக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்பட்டது உண்மைதான்.
“ஒரு படத்தை தள்ளி வெளியீடு செய்யச் சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. யாருக்கும் தமிழ் சினிமா சொந்தம் கிடையாது. சினிமா என் கையில்தான் இருக்கிறது என்று சொன்னவர்கள் யாரும் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது.
“என்னுடைய தயாரிப்பாளர் வட்டி கட்டி படம் எடுக்கும் தயாரிப்பாளர். சும்மா ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு திரையரங்குகளுக்குப் போன் செய்து என் படத்தை வெளியிடு. அந்த நேரத்தில் வேறு எந்தப் படமும் வரக்கூடாது என்று சொல்லும் தயாரிப்பாளர் அல்ல. வட்டிக்கு வாங்கி, வியர்வை சிந்தி ஒரு படம் எடுத்தால், அதைத் தள்ளி வெளியிடச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
“தமிழ் சினிமாவை நீங்கள்தான் குத்தகைக்கு எடுத்து இருக்கிறீர்களா? என்று ரெட் ஜெயண்ட்டில் இருக்கும் ஒரு நபரிடம் கேட்டேன். அந்த நபர் எனக்குத் தெரிந்த நபர். அவரை நான்தான் உதயநிதியிடம் சேர்த்து விட்டேன். அவரே இப்படி ஒரு விஷயத்தை செய்யும்போது என்னால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“காரணம் ‘மார்க் ஆண்டனி’ படத்துக்காக என்னுடைய தயாரிப்பாளர் ரூ.65 கோடி செலவு செய்திருக்கிறார். ஒன்றரை மாதமாக படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கும்போது அதை தள்ளி வெளியிடச் சொன்னபோது எனக்கு கோபம் வந்துவிட்டது.
“நீயும் படத்தை வெளியிடு. நானும் படத்தை வெளியிடுகிறேன். எந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்று மக்கள் முடிவு பண்ணட்டும்.
தொடர்புடைய செய்திகள்
“நீங்கள் மட்டும் படங்களை வெளியிட்டு சம்பாதிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? நீங்கள் மட்டும்தான் உங்கள் படத்தை வெளியிட்டு நீங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா?
“நான் அதே தேதியில் படத்தை வெளியிட்டதால்தான் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தது. எனக்கு ஒரு நல்ல வெற்றி கிடைத்தது. நான் அன்று சும்மா இருந்திருந்தால் படம் வெளியாகி இருக்காது.
“ரத்னம்’ படத்துக்குக் கூட பிரச்சினை வரும். வேண்டுமென்றே தடுக்கப் பார்ப்பார்கள். இங்கே யாருக்கும் தைரியம் கிடையாது.
நட்புக்கும் வியாபாரத்துக்கும் இடையே நான் ஒரு கோடு வரைந்திருக்கிறேன். வியாபாரம் என்பது என்னுடைய உழைப்பு. யாரும் அதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள விடமாட்டேன்” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார்.