விஜய் நடிக்கும் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்த் ஒரு காட்சியில் வருவது போல காட்சி எடுக்க இருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அண்மையில் பிரேமலதா விஜயகாந்த் அளித்துள்ள பேட்டியில், “இயக்குநர் வெங்கட் பிரபு ஐந்து ஆறு முறை என்னைச் சந்தித்தார்.
“அவர் இயக்கும் ‘தி கோட்’ படத்தில் விஜய்யுடன் விஜயகாந்த் நடிப்பதுபோன்ற காட்சி அமைக்க இருப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“எஸ்.ஏ. சந்திரசேகர் மீதும் விஜய் மீதும் கேப்டனுக்கு எப்போதும் மிகப் பெரிய பாசம் உண்டு. விஜய்யும் தேர்தலுக்குப் பிறகு என்னைச் சந்திப்பதாகக் கூறி இருந்தார்.
“எனவே ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வருவது குறித்து அவர்கள் கேட்கும் போது விஜயகாந்த் இருந்திருந்தால் கண்டிப்பாக மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டார்.
“வெங்கட் பிரபுவிடம் உனக்கும் விஜய்க்கும் என்னால் முடியாது என்று சொல்ல முடியாது. விஜய் என்னை வந்து சந்திக்கும்போது நல்ல முடிவாகக் கூறுகிறேன் என்று கூறி வெங்கட் பிரபுவை அனுப்பி வைத்தேன்,”என்று கூறினார்.
அவரின் பேச்சின் மூலம் கட்டாயம் ‘தி கோட்’ படத்தில் கேப்டனை மீண்டும் திரையில் பார்க்கலாம் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரின் ரசிகர்கள்.