‘கில்லி’ மறுவெளியீடு: முதல் நாளில் ரூ.10 கோடி வசூல் பெறலாம்

1 mins read
9747f782-70e5-4fdd-8a93-c3321661953f
20 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக சனிக்கிழமை (ஏப்ரல் 20) திரையரங்குகளில் மறுவெளியீடு கண்டது ‘கில்லி’. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதன் காரணமாக ஏப்ரலில் பெரிய அளவிலான தமிழ்த் திரைப்படங்கள் வெளியீடு காணாத நிலையில், திரைப்பட இயக்குநர்களும் விநியோகஸ்தர்களும் பழைய வெற்றிப் படங்களை மறுவெளியீடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தரணி இயக்கத்தில் 2004ல் வெளியான விஜய்யின் ‘கில்லி’, 20 ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக சனிக்கிழமை (ஏப்ரல் 20) திரையரங்குகளில் மறுவெளியீடு கண்டது.

ஆக அண்மைய அறிக்கைகளின்படி, ‘கில்லி’ மறுவெளியீடு கண்ட முதல் நாளில் உலகம் முழுவதும் அது ஏறக்குறைய ரூ.10 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாள்களாகவே அத்திரைப்படம் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்து வந்தது.

‘கில்லி’யின் மறுவெளியீடு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர்ஹிட் பாடல்களான ‘அர்ஜுனர் வில்லு’ மற்றும் ‘அப்பாடி போடு’ பாடல்களுக்கு திரையரங்குகளில் தாங்கள் நடனமாடுவதைக் காட்டும் காணொளிகளை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

‘கில்லி’யின் மறுவெளியீட்டுக்கு கிடைத்த உற்சாகமான வரவேற்பால் அப்படத்தில் நடித்த திரிஷா மகிழ்ச்சியில் திளைத்தார்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நன்றி நன்றி. நீங்கள் எனக்கு அனுப்பும் அற்புதமான பதிவுகள், காணொளிகளுக்கு மிக்க நன்றி,” எனப் பதிவிட்டார்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்