இயக்குநர்: திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு இல்லை

இயக்குநர்: திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு இல்லை

2 mins read
4d7959bd-9f09-4eff-812a-2b6158568774
திருவள்ளுவர் படத்தில் நடிக்கும் நடிகர்கள். - படம்: ஊடகம்

திருவள்ளுவர் வாழ்ந்த காலத்து கதையாக உருவாகிறது ‘திருக்குறள்’ என்று கூறியிருக்கிறார் திருவள்ளுவர் படத்தின் இயக்குநர்.

திருவள்ளுவர் எழுதிய `திருக்குறள்’ இப்போது திரைப்படமாகிறது. பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறான `காமராஜ்’ படத்தை இயக்கிய எ.பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கும் இயக்குநர் பாலகிருஷ்ணன், படத்தைப் பற்றி கூறுகையில், “திருவள்ளுவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழும் கதையாகவே இந்தப் படம் உருவாகிறது.

“பைபிளுக்குப் பின் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். அறத்தை வலியுறுத்த தோன்றிய நீதி நூல் என்றாலும் அது பிரசார இலக்கியமல்ல.

“கவித்துவமும் அழகியலும் மிக்க அற்புதப் படைப்பு. திரை மொழியிலும் இதைப் பிரதிபலிக்க முயற்சிக்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாட்டையும் படத்தில் பதிவு செய்கிறோம். திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் திரையிடத் திட்டமிட்டுள்ளோம்.

“இது திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு என்று சொல்ல முடியாது. அவர் திருக்குறளை எழுதுவதற்கான பின்புலம் எப்படி இருந்திருக்கும்? அப்போது வாழ்ந்த தமிழ் மக்களின் கலாசாரம், குறள் எழுதுவதற்கான சூழல் எப்படி ஏற்பட்டது, குறள்கள் தோன்றிய வரலாறு, இந்தக் காலகட்டத்தில் எந்தெந்த மன்னர்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது, சம்பந்தப்பட்ட மன்னர்கள் யார் யார், இப்படிப் பல விஷயங்களைப் பற்றி அலசுகிறது ‘திருக்குறள்’ படம்.

“பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில்தான் திருக்குறள் அரங்கேறியது. அந்த அரங்கேற்றம் நடப்பதற்கு முன்னால், நக்கீரர் தடுப்பார். ‘இந்தப் பாடல்கள் நாலடியில் இருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு குறளும் ஒன்றே முக்கால் அடிதான் இருக்கிறது’ என வாதிடுவார். ஆனால் பாண்டிய மன்னன்தான் குறளின் பொருள் உணர்ந்து அதை அரங்கேற்றுவார். இதுபோன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

“முன்னணி நடிகர்கள் யாரும் இதில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. அதனால் கதைக்கான முகங்களாகத் தேடிப்பிடித்து நடிக்க வைக்கிறோம்.

“கூத்துப்பட்டறை கலைஞர்கள் பலரும் இதில் நடிக்கிறார்கள். வள்ளுவராக கலைச் சோழன் நடிக்கிறார். அவரது மனைவி வாசுகியாக தனலட்சுமி நடிக்கிறார்.

“நக்கீரராக இயக்குநர் சுப்ரமணிய சிவா, பாண்டிய மன்னராக ஓ.ஏ.கே சுந்தர் எனப் பலரும் நடிக்கின்றனர். ‘யாத்திசை’ படத்தில் இடம்பெற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இதிலும் இருக்கிறார்கள்.

“முதற்கட்ட படப்பிடிப்பில் மன்னர்களின் காட்சிகள் எடுக்கப்பட்டன. அடுத்த கட்ட படப்பிடிப்புக்குத் தேர்தல் முடிந்த பிறகு எடுக்க இருக்கிறோம்.

“இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய கதை என்பதால் ‘யாத்திசை’ உடையலங்கார நிபுணர் சுரேஷ் குமார், ஆடைகளை வடிவமைக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் பணியாற்றிய சுரேஷ் கல்லேரி கலை இயக்கத்தைக் கவனிக்கிறார். வேலூரில் விஐடி நிறுவனங்களின் வேந்தர், மதுரை டி.டி.ராஜேந்திரன் ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறேன்,” என்றார் இயக்குநர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி