தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘போராட்டமும் உழைப்பும் மட்டுமே நிலையானது’

3 mins read
9cffd3c7-b6db-469b-9631-2a8357f613cc
சமந்தா. - படம்: ஊடகம்

தமது சிறு வயதில் சொகுசான வாழ்க்கை அமையவில்லை என்கிறார் சமந்தா.

ஒவ்வொரு நாளும் பல்வேறு சிரமங்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்றும் பாட்காஸ்ட் ஒன்றில் பேசும்போது அவர் உருக்கத்துடன் குறிப்பிட்டார்.

‘மயோசிடிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, தற்போது சிகிச்சையின் ஒரு பகுதியாக ஓய்வெடுத்து வருகிறார்.

எனினும் புதுப் படங்களில் நடிப்பதற்காக கதை கேட்பது, சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்களிடம் உரையாடுவது என ஏதேனும் ஒருவகையில் பொழுதைக் கழித்து வருகிறார்.

சில படங்களில் ஒப்பந்தமாகி உள்ள அவர், குறுகியகால படப்பிடிப்புகளில் மட்டும் பங்கேற்கிறார்.

இந்நிலையில், பாட்காஸ்ட் மூலம் அவர் உரையாடியது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. அதில் கூடுமானவரை தனது சிறு வயது வாழ்க்கையை மீண்டும் அசைபோட்டுள்ளார் சமந்தா.

“என்னுடைய குழந்தைப் பருவத்தில் நான் சொகுசாக இருந்ததில்லை, நிறைய கஷ்டங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன்.

“அதனால், எப்படியாவது வாழ்க்கையில் சாதித்துவிட வேண்டும் என்பதில்தான் என் முழுக் கவனமும் இருந்தது. என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன், கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொள்வேன்,” என்று குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

தம்முடைய 22வது வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அச்சமயம் சினிமா குறித்து தமக்குப் பெரிதாகத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

“அறிமுகமான வேகத்தில் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டேன். எனது கதாபாத்திரங்களை எவ்வாறு மெருகேற்ற வேண்டும், அதற்காக எத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

“கடுமையாக உழைத்தேன் என்பது மட்டும் நன்கு தெரியும். திரைத்துறையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு அதைத் தக்க வைத்துக்கொள்ள இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அதைச் செய்யவில்லை என்றால் மீண்டும் பழைய நிலைமைக்குச் சென்றுவிடுவோம் என்ற பயமும் இருந்தது.

“இந்தத் திரைத்துறையில் கடுமையாக உழைத்தால்தான் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன்,” என்கிறார் சமந்தா.

தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், போராட்டமும் உழைப்பும் மட்டுமே என்றும் நிலையானது என்று தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“திரையுலகில் அறிமுகமாகும் எல்லாருக்குமே திரையுலகம் குறித்த சில எதிர்பார்ப்புகள் இருக்கவே செய்யும். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. எனினும் நமது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் தயாராக வேண்டும் என்பதுதான் முக்கியம்.

“கடும் உழைப்புடன் நமது இலக்கின் மீது கவனம் செலுத்த வேண்டும். வேறு சிந்தனைகளே இருக்கக்கூடாது,” என்கிறார் சமந்தா.

தமது திரையுலகப் பணிகள் குறித்தும் பயணம் பற்றியும் சமந்தா மனம் திறந்து பேசியிருப்பது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

இதற்கிடையே, தமிழ்ப் படங்களில் நடிக்கவும் சமந்தா தயாராகி வருவதாகத் தெரிகிறது. அவர் கதை கேட்டுள்ள இயக்குநர்களில் சிலர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர்களாம்.

எனினும், தாம் ஒப்புக்கொள்ளும் படங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வெளியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளார். அனைத்தும் உறுதியாகி, படப்பிடிப்புக்குக் கிளம்பும் வேளையில், இத்தகவல்களை வெளியிட்டால் போதும் என அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல். அவரது திரையுலக நண்பர்களும் இவ்வாறுதான் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆனால் ரசிகர்களோ இப்போதே அனைத்து விவரங்களையும் பகிருமாறு அவரை நச்சரிக்கத் தொடங்கி உள்ளனர். ஒருவேளை சமந்தாவின் முடிவு மாறக்கூடும்.

இதனிடையே, மருத்துவச் சிகிச்சைக்காக சமந்தா மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்வார் என்று வெளியான தகவலை அவரது தரப்பு மறுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்