பிரேமலதா: விஜயகாந்த்க்கு பத்ம பூஷன் விருது

1 mins read
339d485b-6671-4a9e-a998-4f8c7e575f0f
விஜயகாந்த். - படம்: ஊடகம்

காலஞ்சென்ற நடிகர் விஜய்காந்துக்கு பத்ம பூஷன் விருது வழங்க இருக்கிறது மத்திய அரசு.

மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கின்றன.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவருக்கு விருது வழங்குவதில் மத்திய அரசு தாமதிப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம், “விஜயகாந்திற்கு வரும் 9ஆம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து மூன்று நாள்களுக்கு முன்பு அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டில்லி செல்ல உள்ளோம்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி