ஓடிடியில் 48 மொழிகளில் வெளிவரும் ‘கங்குவா’

2 mins read
0c9343dc-e53e-427e-85e1-f10ecd87b430
நடிகை ஜோதிகா. - படம்: ஊடகம்

நானும் சூர்யாவும் மீண்டும் இணைந்து நடிப்போமா? எனப் பலரும் சந்தேகத்துடன் கேட்டு வருகின்றனர். “நல்ல திரைக்கதையும் அதற்கான வாய்ப்பும் அமைந்தால் நிச்சயம் நாங்கள் மீண்டும் இணைந்து நடிப்போம்,’’ என்று தெரிவித்துள்ளார் நடிகை ஜோதிகா.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் திரையுலகைவிட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்தவர், இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

‘சைத்தான்’ படம் மூலம் பாலிவுட் திரையுலகுக்குச் சென்றுள்ள நிலையில், ‘கங்குவா’ படம் குறித்தும் நடிகர் சூர்யா குறித்தும் பேட்டி அளித்துள்ளார் ஜோதிகா.

‘கங்குவா’ வரலாற்று கதையம்சத்துடன் கூடிய திரைப்படம் என்பதால் இப்படத்தில் விதவிதமான தோற்றங்களில் நடித்திருக்கிறார் சூர்யா.

இந்நிலையில், ‘கங்குவா’ படத்தின் ஒருசில காட்சிகளை மட்டுமே தான் பார்த்து ரசித்ததாகவும் அவை பிரமிக்க வைத்ததாகவும் கூறி இருக்கும் ஜோதிகா, திரையுலகமும் திரைப்படப் பிரியர்களும் முதல்முறையாக ஒரு புதிய வித்தியாசமான அனுபவத்தை ‘கங்குவா’ படம் மூலம் பெறப்போகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜோதிகாவின் இந்தக் கருத்து ‘கங்குவா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

“சூர்யா எனது நல்ல நண்பர். நான் திரைத்துறைக்கு வந்தபின் அறிமுகமான முதல் மனிதர் அவர்தான். என் முதல் படத்தில் அவரோடுதான் நடித்தேன். நீண்ட காலம் நண்பர்களாகவே இருந்து ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்ட பின்னர் திருமணம் செய்துகொண்டோம்.

“அவ்வளவு காலம் நண்பர்களாகப் பழகியதால் எங்களின் உறவு வலுவாக உள்ளது.

“சூர்யா எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் 200% அளவுக்கு தன் முழுத் திறனையும் வெளிப்படுத்தக் கூடியவர்.

“மனைவி, குழந்தைகள், பெற்றோர் என குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதில் அவர் எப்போதும் 200% அக்கறை காட்டுவார். அதேபோல்தான் அவரது நடிப்புத் திறனிலும் 200% கவனம் செலுத்தி வருகிறார்,” எனக் கூறியுள்ளார் ஜோதிகா.

இதுவரை இல்லாத சாதனையாக ‘கங்குவா’ படம் தமிழில் தயாரானாலும் 48 மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

திரையரங்குகளில் 10 மொழிகளிலும் ஓடிடியில் 48 மொழிகளிலும் என இப்படம் திரையிடப்படுவது இந்திய திரை உலகில் இதுவரை இல்லாத சாதனையாகக் கருதப்படுகிறது.

‘கங்குவா’ படத்தின் முன்னோட்டக் காட்சியையும் இசை வெளியீட்டு விழாவையும் விரைவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது. இந்தப் படத்தின் பட்ஜெட் ஏறக்குறைய ரூ.300 கோடி எனக் கூறப்படுகிறது.

சூர்யாவும் ஜோதிகாவும் 1999ல் வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் தொடங்கி பல வெற்றிப் படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அஞ்சலி மேனன் இயக்கும் படத்தில் இருவரும் இணைந்து நடிப்பதற்குப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தகவல் பரவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்