தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடும் வாக்குவாதம், ரகளை: பிரபு தேவா வருத்தம்

2 mins read
f6f850cf-92f8-4ec9-b07c-eecfd150b448
நடிகர் பிரபுதேவா. - படம்: ஊடகம்

இந்திய மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர், இயக்குநர், நடன அமைப்பாளருமான பிரபுதேவாவின் ‘100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம்’ என்ற உலகச் சாதனை நிகழ்ச்சிக்கு நடன இயக்குநர் ராபர்ட் ஏற்பாடு செய்திருந்தார்.

இதற்காக நடனக் கலைஞர்கள், சிறார்கள் என 5,000 பேர் ஒன்றுதிரண்டிருந்தனர்.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபுதேவா கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அவரைப் பார்ப்பதற்காகவே பல ஊர்களில் இருந்தும் ஏராளனமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். வெயிலையும் பொருட்படுத்தாது தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் பலரும் வந்திருந்தனர்.

ஆனால், திட்டமிட்டபடி பிரபுதேவா நிகழ்ச்சிக்கு வராததால் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகளில் சிலர் பல மணிநேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் மயங்கி விழுந்தனர்.

நிகழ்ச்சியில் பிரபு தேவா கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டு ஒவ்வொரு சிறுவர் சிறுமியிடமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காலை 6 முதல் 7.30 மணிக்குள் நடன நிகழ்ச்சி முடிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் 9 மணி ஆகியும் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த நடனக் கலைஞர்களும் தங்கள் பிள்ளைகளை நடனமாட அழைத்து வந்திருந்த பெற்றோரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

காலை உணவுக்குகூட ஏற்பாடு செய்யாமல், உரிய நேரத்தில் நிகழ்ச்சியையும் தொடங்காமல் குழந்தைகளை வெயிலில் நிற்கவைத்துவிட்டதாக புகார் கூறினர்.

அதன்பின்பு அவசர அவசரமாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சிறிது நேரத்தில் பிரபு தேவா வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் தங்களது குழந்தைகளைப் பாதியிலேயே வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, பிரபு தேவா வருத்தம் தெரிவித்து காணொளி வெளியிட்டார். அது அங்கிருந்த பெரிய தொலைக்காட்சி திரையில் ஒளிபரப்பப்பட்டது.

“நான் தற்போது ஹைதராபாத்தில் இருக்கிறேன். எனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரமுடியாமல் போய்விட்டது. பெரும் சிரத்தையோடு நடன நிகழ்வைச் செய்துள்ளீர்கள். என்னால் ஏற்பட்ட சிரமத்திற்காக நடனக் கலைஞர்களுக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

பின்னர் மற்றொரு நாளில் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த தேதி கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

உலகச் சாதனை நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி பாதியிலே நிறுத்தப்பட்டதால் உலகச் சாதனை முயற்சி கைவிடப்பட்டு, பிரபுதேவாவிற்கான அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக அது மாற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியால் சிறுவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன் பெற்றோரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அதனால் வசூலித்த ரூ.2,000 தொகையை வி.எஸ். ராக்ஸ் அமைப்பினர் தங்களிடம் திரும்ப அளிக்கவேண்டும், அவர்கள் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என பெற்றோர் கோரியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்