தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐஸ்வர்யா லட்சுமி தோழி, காதலி அல்ல: அர்ஜுன் தாஸ்

3 mins read
cd571e77-136d-4801-9d58-609b50cc6d80
ஐஸ்வர்யா லட்சுமியுடன் அர்ஜுன் தாஸ். - படம்: ஊடகம்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்துவரும் அர்ஜுன் தாஸ், “நடிகை ஐஸ்வர்யா லட்சுமி எனது நெருங்கிய தோழி மட்டுமே. மற்றபடி எங்களுக்கிடையே காதல் கீதல் எதுவும் கிடையாது,” என நாளும் பரவிவரும் கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

“திருமணத்தைப் பற்றி எனது பெற்றோர் இதுவரை எதுவும் பேசவில்லை. இப்போது அதற்கு எந்த அவசரமும் இல்லை. சினிமாவில் சாதிக்கவேண்டியது நிறைய உள்ளது,” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன் தாஸின் வசீகரிக்கும் குரல் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ள நிலையில், ‘கைதி’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்துள்ளார்.

அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றங்களில் மிரட்டியுள்ளார் அர்ஜுன் தாஸ். தற்போது ‘மௌனகுரு’ சாந்தகுமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ரசவாதி’ படம் வரும் 10ஆம் தேதி வெளிவருகிறது.

இதனை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அர்ஜூன் தாஸ், “எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் சிறப்பான வேடங்களைத் தந்து என்னைப் பெருமைப்படுத்தி உள்ளனர்.

“ஒரு ‘டப்பிங்’ கலைஞராக திரைப் பயணத்தைத் தொடங்கினேன். இப்போது நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிவதால் அதில் கவனம் செலுத்தி வருகிறேன்,” என்கிறார்.

“இயக்குநர் லோகேஷ் எனது சிறந்த நண்பர். அவர் அழைத்தால் ரஜினிகாந்த் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால், இப்போதைக்கு நான் ரஜினி படத்தில் உள்ளேனா என்பதை லோகேஷ்தான் கூறவேண்டும்,” என்றவர், “ஒரு நேரத்தில் ஒரு படத்தில் நடிப்பதுதான் தனது பழக்கம்,” என்கிறார்.

“கடந்த வருடம் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அதுபோல் இந்தாண்டும் நிறைய படங்கள் தொடர்ந்து வெளியீடாகும்,” என்று சொன்னவர், இப்போதைக்கு வில்லன் வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை, முக்கிய பாத்திரங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வருகின்றன. லோகேஷ் கூப்பிட்டால் வில்லனாகத்தான் நடிக்கக் கூப்பிடுவார். அப்படி கூப்பிட்டால் கண்டிப்பாகச் செய்வேன்,” என உத்தரவாதம் கொடுக்கிறார்.

“நானாகத் தேர்ந்தெடுத்து எந்த இயக்குநருடனும் வேலை பார்ப்பதில்லை. அவர்களாக அழைக்கிறார்கள். நான் நடிக்கிறேன், அவ்வளவுதான். எனக்கு மிகச்சிறந்த இயக்குநர்கள் அமைந்தது என் பாக்கியம். இப்போது நிறைய கதைகளைக் கேட்டு எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்,” என்று சொல்லும் அர்ஜுன் தாஸ், திரைத்துறையில் தானும் நிறைய நிராகரிப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறுகிறார்.

“நிறைய பேர் என் குரல் எனக்கு ‘மைனஸ்’ என்றனர். இப்போது அது ‘ப்ளசாக’ மாறியுள்ளது. இது எல்லார் வாழ்விலும் நடக்கும். திரைத்துறையும் அப்படித்தான்.

“நடிகராக இருப்பதும தொடரும் இந்தத் திரைத்துறை பயணமும் மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.

“இயக்குநர் லோகேஷிடம்தான் எனது நடிப்புப் பயணம் ஆரம்பித்தது. ‘கைதி’ திரைப்படம்தான் நான் இந்த மேடையில் இருக்கக் காரணம். லோகேஷ் எனக்கு நிறைய வாய்ப்புகள் தந்துள்ளார். அவர் எனது மிகச்சிறந்த வழிகாட்டி. எனக்கு வாய்ப்பு தரும் இயக்குநர்கள்தான் என் வழிகாட்டிகள். விக்னேஷும் என் வழிகாட்டிதான். லோகேஷுடன் இணைந்து அதிக நேரம் வேலை செய்ததால் அவரைப் பற்றி அதிகம் சொல்கிறேன்.

“தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை,” எனக் கூறியுள்ளார் அர்ஜுன் தாஸ்.

குறிப்புச் சொற்கள்