மலையாளத்தில் முன்னணி நடிகையாக உருவாகி வரும் சாந்தினி ஸ்ரீதரன், அடுத்து தமிழ் படங்களில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.
மலையாளத்தில் பிருத்விராஜ், துல்கர் சல்மான் என முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அடுத்த கட்டமாக, இவர் தமிழில் நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறாராம்.
சாந்தினி கோடம்பாக்கத்துக்கு புதுவரவல்ல. ஏற்கெனவே தமிழில் ‘555’ என்ற படத்தில் நடித்தவர். தற்போது அமீர் நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சாந்தினியின் சொந்த ஊர் கேரளாவில் உள்ள கோழிக்கோடு. இவரது தந்தைக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததால் மொத்த குடும்பமும் சில ஆண்டுகளுக்கு முன்பே அங்கு சென்றுவிட்டதாம்.
அமெரிக்காவில் தனது பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்த சாந்தினி, நடனத்திலும் பாட்டு பாடுவதிலும் கெட்டிக்காரராம். கதகளி, பரதம், பாலே உள்ளிட்ட நடனங்களை முறைப்படி கற்றுக்கொண்டுள்ளார்.
இவரது நடனம் அருமையாக இருப்பதாக பலரும் பாராட்டி உள்ளனர். சினிமாவில் நடிக்கலாம் என்றுகூட பலர் ஊக்கம் அளித்தனராம்.
“ஆனால் எனக்கு அதுபோன்ற விருப்பங்கள் எதுவும் அப்போது இல்லை. படிப்பில்தான் கவனமாக இருந்தேன்.
“திரையுலகில் நுழைந்தபோது எனக்கு என எந்தவிதமான லட்சியங்களும் இல்லை. பெரிய கதாநாயகியாக உருவெடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளும் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
“மலையாளத்தில் எனது முதல் படம் வெளியானது. ‘கே.எல்.10’ என்ற படம் பெரிய வெற்றியைப் பெற்றதால் மலையாள ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானேன். அதன் பலனாக பிருத்விராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் நடிக்க வாய்ப்புகள் அமைந்தன.
“ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்கள் அமைந்ததால் எனது ரசிகர்களும் விமர்சகர்களும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையைத் தக்கவைக்க வேண்டும் என்பதே தற்போதைய போராட்டம். நல்ல நடிகை என்று பெயரெடுத்தால் அதுவே போதும்,” என்கிறார் சாந்தினி.
கொரோனா காலகட்டத்தில் மொத்த திரையுலகமும் முடங்கியதை அடுத்து தனக்கான வாய்ப்புகளும் கைகூடாமல் போனதாகச் சொல்லும் இவர், இப்போது தெலுங்கிலும் நல்ல வாய்ப்புகள் கிடைப்பதாகக் கூறுகிறார்.
பட்டப்படிப்பையும் முடிக்க வேண்டியிருந்ததால் திரையுலகம் குறித்து யோசிக்கக்கூட முடியாமல் இரண்டு ஆண்டுகள் கனவு கடந்துபோனதாகச் சொல்கிறார்.
இந்நிலையில் ‘உயிர் தமிழுக்கு’ படம் மீண்டும் தன்னை தமிழ் ரசிகர்களோடு இணைத்து வைக்கும் என நம்புகிறாராம்.
“இந்தப் படத்தில் எனது பெயர் தமிழ். கால்நடை மருத்துவராக நடித்துள்ளேன். மிகவும் மாறுபட்ட, அழுத்தமான கதாபாத்திரம் எனலாம்.
“இப்படத்தில் அரசியல் சார்ந்த சில காட்சிகளும் சம்பவங்களும் உள்ளன. இதுபோன்ற வேடத்தில் எனக்கு முன் அனுபவம் இல்லை. எப்படியோ சமாளித்துவிட்டேன். அதற்கு காரணம் இயக்குநர் ஆதம் பாவா.
“கலைஞர்களிடம் இருந்து எத்தகைய பங்களிப்பு தனக்குத் தேவை என்பதில் அவர் மிகத் தெளிவாக இருப்பார். அவர் தந்த ஊக்கத்தால்தான் நன்றாக நடிக்க முடிந்தது.
“தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி மக்களிடமும் கலாசார ரீதியாக நிறைய ஒற்றுமைகள் உள்ளன. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன்தான் கதை கேட்கிறேன்.
“எந்த மொழியில் நான் எதிர்பார்க்கும் கதை அமைகிறதோ அதில் நடிக்கிறேன். இப்போது இந்தியாவின் அனைத்து மொழி ரசிகர்களும் கண்டுகளிக்கும் வகையில் படங்களைத் தயாரிக்கிறோம்.
“எனவே அனைத்தும் நூறு விழுக்காடு சரியாக உள்ளனவா என்பதை உறுதிசெய்வது அவசியமாகிறது என்று சொல்லும் சாந்தினி, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்பதால் கிடைத்த வாழ்க்கையை ஒழுங்காக வாழ வேண்டும்,” என்கிறார்.
நல்ல நடிகை என்று பெயர் எடுத்தால் அதுவே போதுமானது என்றும் கூறுகிறார் சாந்தினி.
“அமெரிக்காவில் இருந்து தமிழகத்துக்கு வருவேன் என்றோ, கதாநாயகியாக நடிப்பேன் என்றோ கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அது திடீரென நிகழ்ந்தது.
“அதனால்தான் நல்ல நடிகை என பெயர் எடுத்தால் அதுவே போதும். நம்பர் ஒன் நடிகையாக வேண்டும், கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்பன போன்ற லட்சியங்கள் எனக்கு எதுவுமில்லை. நல்ல நடிகை என்ற பெயர் மட்டுமே போதுமானது,” என்று பக்குவமாகப் பேசுகிறார் சாந்தினி.

