தமிழ்த் திரையுலகில் இப்போது பழைய படங்களுக்கு மீண்டும் மவுசு ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வெற்றி பெற்ற, பெரிதும் பேசப்பட்ட படங்களை மறுவெளியீடு செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதன் மூலம் பெரும் தொகையைப் பெற முடியும் என்பதை நடிகர் விஜய்யின் பழைய படங்கள் நிரூபித்துள்ளன. அண்மையில் மறுவெளியீடு கண்ட ‘கில்லி’ ரூ.20 கோடி வசூல் கண்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, விஜய் நடித்த ‘வில்லு’, ‘சச்சின்’ உள்ளிட்ட படங்களும் அடுத்தடுத்து மறுவெளியீடு காண உள்ளன.
கடந்த காலங்களில் சிவாஜியின் ‘வசந்த மாளிகை’, எம்ஜிஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உள்ளிட்ட சில படங்கள் அவ்வப்போது ஒன்றிரண்டு திரையரங்குகளில் வெளியானதுண்டு.
இந்நிலையில், கமலின் ‘வேட்டையாடு விளையாடு’, ‘ஆளவந்தான்’, ரஜினியின் ‘பாபா’, ‘முத்து’, அஜித்தின் ‘தீனா’, ‘பில்லா’, சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘வல்லவன்’, விஜய் சேதுபதியின் ‘96’ ஆகிய படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டபோது இளம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பட வெளியீட்டையொட்டி சுவரொட்டிகள், ஊடக விளம்பரங்கள் என எந்தவிதமான செலவையும் ஏற்படுத்தாமல் இந்தப் படங்கள் வெளியாகி நல்ல வசூலைத் தந்துள்ளன. தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான எஸ்.தாணு, மறுவெளியீடு காணும் படங்களால் தயாரிப்பாளர்களுக்கு மீண்டும் லாபம் கிடைப்பதாகச் சொல்கிறார்.
“15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்களை இன்றைய இளையர்கள் திரையரங்கில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவேதான் மறுவெளியீட்டுப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
“இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘கில்லி’ படம் அச்சமயத்தில் பெற்றுத்தராத லாபத்தை இப்போது தருகிறது. ஒரு தயாரிப்பாளராக இது மகிழ்ச்சி தருகிறது,” என்கிறார் தாணு.
பல்வேறு பிரச்சினைகளால் அண்மைக் காலங்களில் புதுப்படங்களின் வெளியீடு தாமதமாகிறது. பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் பழைய படங்களை மறுவெளியீடு செய்யும்போது எந்தவிதச் சிக்கல்களும் எழுவதில்லை என அத்தரப்பு சுட்டிக் காட்டுகின்றது.
பழைய படங்களை மறுவெளியீடு செய்வது நீண்ட காலமாகவே வழக்கத்தில் இருப்பதாகச் சொல்கிறார் தயாரிப்பாளர் தனஞ்சயன். தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி, தரமான மலையாளப் படங்களும் தமிழகத்தில் தற்போது நல்ல வசூல் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கிடையே, படங்களின் மறுவெளியீட்டுக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுப் படங்களின் வெளியீட்டையும் வசூலையும் பழைய படங்கள் தடுப்பதாக அத்தரப்பினர் கூறுகின்றனர்.
மிகக் குறைந்த தொகைக்கு வெளியீட்டு உரிமையை வாங்குவதால் புதுப்படங்கள் குறித்து திரையரங்க உரிமையாளர்கள் யோசிப்பதில்லை என சில தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ தமிழில் நல்ல வசூல் கண்டுள்ளது. எனவே நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் சோடை போகாது என்றும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்திருந்தால் அந்தப்படம் வசூலை அள்ளிக் குவிக்கும் என்கிறார் திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்பிரமணியம்.
கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’, விக்ரமின் ‘தங்கலான்’ உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு முழுவீச்சில் தயாராகி வருகின்றன. அந்தச் சமயத்திலும் பழைய வெற்றிப் படங்கள் வசூலில் சாதிக்குமா, புதுப் படங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை அறிய திரையுலகத்தினர் காத்திருக்கின்றனர்.

