இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை ஒரு படம் வெற்றி பெற்றால்தான் அதில் நடித்த அறிமுக நாயகிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையும் என்கிறார் நடிகை ஜோதிகா.
திடீரென இந்திப் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ள இவர், தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு தமக்கு பாலிவுட்டில் அமையவில்லை என்கிறார்.
“நான் இந்தித் திரையுலகில்தான் முதன்முதலில் அறிமுகமானேன். என் முதல் இந்திப் படத்தில் நடித்தபோது சரியாக வரவேற்பு கிடைக்கவில்லை. இந்திப் பட வாய்ப்பு ஏதும் அமையாததால் தமிழில் கவனம் செலுத்தினேன்.
“அதன் பலனாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து முடித்தேன். தமிழ் ரசிகர்களிடம் எனக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. என் படங்கள் வெற்றி பெறவில்லை என்றபோதும்கூட, என் திறமையைப் பார்த்து நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. இதுதான் பாலிவுட்டிற்கும் கோடம்பாக்கத்துக்கும் இருக்கும் வித்தியாசம்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் ஜோதிகா.
தமிழில் முன்னணி நாயகியாக உயர்ந்த பிறகு இவர் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடிப்பார் என பாலிவுட் இயக்குநர்கள் நினைத்துவிட்டனராம். அதனால்தான் இந்திப்பட வாய்ப்புகள் வரவில்லை என்று இவரும் முடிவு செய்துவிட்டாராம்.
அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக இந்திப் படங்களில் நடிக்க முடியாமல் போனது என்று குறிப்பிட்டுள்ள ஜோதிகா, கடந்த ஆண்டில்தான் பாலிவுட்டில் இருந்து மீண்டும் தம்மை அணுகியதாகக் கூறியுள்ளார்.
“இந்தியில் நடிக்கக் கேட்டு சிலர் என்னை அணுகினார்கள். கதைகள் கேட்டேன், பிடித்திருந்தது. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதனால், தற்போது பாலிவுட்டில் மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறேன்” என்கிறார் ஜோதிகா.
கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான ‘டோலி சஜாகே ரக்னா’ என்ற படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார் ஜோதிகா.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே, தமிழ்த் திரையுலகத்துக்கு வந்தார்.
‘வாலி’ படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் அறிமுகமான ஜோதிகா, அதன் பிறகு தனது தனிப்பட்ட நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டுதான் அவர் மீண்டும் இந்திப் படத்தில் நடித்துள்ளார்.
‘சைத்தான்’ என்ற தலைப்பில் உருவான இப்படத்தில் ஜோதிகா நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து, ‘ஶ்ரீகாந்த்’ என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளார்.
தற்போது மும்பையிலேயே குடியேறி உள்ளார் ஜோதிகா.
மும்பையில் தங்கியிருந்தால் பட வாய்ப்புகள் கிடைப்பது எளிதாகும் என்பதால் சென்னையில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்.
இந்நிலையில், இந்தியில் நடிக்க நிறைய இளம் இயக்குநர்களிடம் ஜோதிகா கதை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழைப் போல் இந்தியில் தனி நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதால் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் அமைந்தால் அதுவே போதும் என்ற முடிவில் உள்ளார் ஜோதிகா.
மேலும், இந்தியில் நடிப்பதற்கு சம்பள விவகாரத்தில் அவர் கறார் காட்டுவதில்லையாம்.
இதற்கிடையே, ஜோதிகா தனி நாயகியாக நடிக்கவுள்ள இரண்டு படங்களைத் தயாரிக்க அவரது கணவர் சூர்யா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காகவும் ஜோதிகா தற்போது கதை கேட்டு வருகிறாராம். புதுமுக இயக்குநர்கள் சிலர் மும்பைக்கே பறந்து சென்று கதை சொல்வதாகத் தகவல்.
என்னதான் தமிழ்ப் படங்களில் நடித்து சாதித்திருந்தாலும், இந்தியில் பெயரெடுக்க வேண்டும் என்ற ஆசை ஜோதிகாவுக்கு அதிகம் உள்ளது. அதற்காகத்தான் தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
ஜோதிகா மேற்கொள்ளும் தீவிர முயற்சிகள் வெற்றி பெற ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

