ஒரு படத்தின் வெற்றிக்காக அதிகம் மெனக்கெடுவது தமிழ்த் திரையுலகத்தினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நலன் குமாரசாமி இயக்கத்தில் தாம் நடிக்கும் புதுப் படத்துக்காக சிலம்பம் கற்று வருகிறாராம் நடிகர் கார்த்தி.
இந்தப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.
“கதைப்படி ராஜ்கிரணும் கார்த்தியும் தாத்தா, பேரனாக நடித்து வருகின்றனர். ராஜ்கிரண் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். அவரும் கார்த்தியும் இணைந்து அடிக்கும் லூட்டிகள் ரசிகர்களை வெகுவாகக் கவரும்,” என்கிறார் நலன் குமாரசாமி.
படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாம். சில சிறிய காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது.
இப்படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
படத்தில் சிலம்பச் சண்டைக் காட்சி ஒன்று இடம்பெறுகிறது. இதற்காக சண்டைப் பயிற்சியாளர் பாண்டியன் மாஸ்டரிடம் முறைப்படி சிலம்பம் கற்று வருகிறார் கார்த்தி.
“கார்த்தி ஏற்கெனவே சிலம்பம் கற்றிருந்தாலும் இந்தப் படத்தில் எம்ஜிஆரைப் போல அடவு வைத்து சண்டைபோட விரும்புகிறார். அதற்காகத்தான் அவர் மீண்டும் சிலம்பம் கற்று வருகிறார்,” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

