வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ (GOAT) படத்தில் சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக வெளியான தகவல் இருவரது ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மொத்தம் பத்து நிமிடங்கள் மட்டுமே சிவா திரையில் தோன்றும் வகையில் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
‘கோட்’ படத்தை அடுத்து, சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் இயக்குகிறார் வெங்கட் பிரபு. இதையடுத்து வெங்கட் முன்வைத்த கோரிக்கையை ஏற்று கௌரவ வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சிவா.
இவரும் விஜய்யும் மக்கள் கூடும் இடத்தில் சந்தித்துப் பேசும் காட்சி முதலில் படமாக்கப்படுகிறது.
ஒரு முக்கியமான விவகாரம் குறித்து இருவரும் விவாதிப்பர் என்றும் அந்த விவாதம் படத்தில் எதிர்பாராத திருப்புமுனையை உருவாக்கும் வகையில் அமையும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘கோட்’ படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. ஏற்கெனவே இப்படத்திலிருந்து ‘விசில் போடு’ என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றொரு பாடல் வெளியாகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் சில காட்சிகளைப் படமாக்கினால், 90% படப்பிடிப்பு முடிவுக்கு வந்துவிடும் எனத் தெரிகிறது.
மேலும், இந்த ஆண்டு பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் திரை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.