நல்ல வசூலுக்காகக் காத்திருக்கும் திரையுலகம்

நல்ல வசூலுக்காகக் காத்திருக்கும் திரையுலகம்

3 mins read
e42a5cea-3a2b-4046-bd6b-9001aa077c5a
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நாயகர்களான விக்ரம், விஜய், ரஜினி, கமல், அஜித், சூர்யா. - படம்: ஊடகம்

கொரோனா நெருக்கடி காலத்திற்குப் பிறகு மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்கிறது தமிழ்த் திரையுலகம்.

பெரிய நடிகர்களின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் மட்டுமே திரையுலக கலைஞர்கள் தொடர்ந்து தரமான படைப்புகளைத் தர இயலும். எனவே புதிதாக வெளியாகும் படங்கள் மீது ரசிகர்களின் பார்வை தொடர்ந்து விழுகிறது.

இந்த ஆண்டில் தனுஷ், விக்ரம், கமல்ஹாசன், ரஜினி, விஜய் ஆகியோரின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இப் படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக ஈடுகட்டும் வகையில் இருக்கும் என கூறப் படுகிறது.

நடப்பாண்டில் இதுவரை 80க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த எண்ணிக்கை ஆச்சரியப்பட வைத்தாலும் அவற்றுள் 98% படங்கள் அதிக வசூலைப் பெறவில்லை என்பதுதான் சோகம்.

அண்மையில் வெளியான ‘அரண்மனை – 4’ படத்தின் முதல் வார வசூல் ரூ.50 கோடி என்கிறார்கள். மேலும், இந்தப்படம் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகிப்பாளர்கள், திரை யரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமே நல்ல லாபத்தை பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த ஆண்டு தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்தி கேயன் நடித்த ‘அயலான்’ ஆகிய படங்கள் மட்டுமே ரூ.100 கோடி வசூல் கண்டுள்ளன. வேறு எந்த படமும் இந்த வசூலைப் பெறவில்லை.

அனைத்து தரப்பினரும் லாபம் பெறக்கூடிய படங்களின் எண்ணிக்கை அதிகமானால்தான் தமிழ்த்திரையுலகம் செழிக்கும். சில படங்கள் குறிப்பிட்ட ரசிகர்களை மட்டுமே திருப்தி படுத்தும் வகையில் உள்ளன. அவற்றுக்குக் கிடைக்கும் வரவேற்பைக் கவனத்தில் கொள்ள வேண்டாம் என்கிறார்கள் விநியோகிப்பாளர்கள்.

தற்போது வெளியீடு காண தயாராகி வரும் சில படங்களை பார்ப்போம்.

வரும் ஜூன் மாதத்தைப் பொறுத்தவரை, தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படம் திரைகாண்கிறது. இதை தனுஷே இயக்கியுள்ளார். அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் திரை காண்கிறது. இரு படங்களும் ஓரே நாளில் வெளியீடு காண வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள ‘இந்தியன் 2’ படம் வெளியாகிறது. நீண்ட கால தயாரிப்பில் இருந்து வரும் இப்படம், முதல் பாகத்தைவிட வியப்பூட்டும் வகையில் இருக்குமாம். உலகத்தரத்திலான நல்ல வணிகப் படமாக சங்கர் இதை உருவாக்கி உள்ளதாகத் திரை உலகத்தினர் பாராட்டுகிறார்கள்.

விஜய்யின் ‘தி கோட்’ படம் செப்டம்பர் மாதம் வெளியாகி றது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘வேட்டையன்’ படம் திரைக்கு வரும் என்கிறார்கள்.

இதனிடையே, எதிர்வரும் டிசம்பர் மாதம் மணிரத்னம், கமல்ஹாசனின் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக்லைஃப்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’, சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ ஆகியவையும் இந்த ஆண்டுக்குள் வெளியாவது உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

போதாதகுறைக்கு பிற மொழி படங்களும் தமிழக திரையரங்குகளை முற்றுகையிட உள்ளன. அவற்றுள் ‘புஷ்பா 2’, ‘கல்கி 2898 ஏடி‘ முக்கியமான படங்கள் எனக் குறிப்பிடலாம்.

இவற்றைத் தவிர, குறைந்த செலவில் எடுக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் நல்ல வெளியீட்டு தேதிக்காக காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

‘முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள் வசூலில் வெற்றி பெற்றால்தான் தமிழ் சினிமாவின் தலைநகரமான கோடம்பாக்கத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

இதையடுத்து இரண்டாம் நிலை நாயகர்கள் படங்கள் வெளியாகக் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான திரைகள் கிடைக்க வேண்டும். இதற்குப் பிறகுதான் குறைந்தபட்ச படங்கள் வெளியாக வேண்டும்.

ஆனால், சில படங்களை ஓரிரு நாள்கள் மட்டுமே வெளியிடும் திரையரங்குகள் பின்னர் தயவு தாட்சண்யம் இன்று தூக்கி விடுகின்றன.

இதனால், பல படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்று கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்