தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ‘அரண்மனை 4’ படத்தில் நடித்துள்ள இவர், இப்படத்தில் நடிப்பதற்கு 5 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இவர் முன்னதாக நடித்த ‘ஜெயிலர்’ படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் பெற்றதாகவும் தெரிகிறது.
‘அரண்மனை 4’ படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்தப் பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே, பாக்ஸ் ஆபிஸில் அரண்மனை 4 வசூலைக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அரண்மனை படத்தின் முதல் பாகம் மட்டுமே வெற்றிபெற்றிருந்த நிலையில், இரண்டாவது, மூன்றாவது பாகங்கள் வரவேற்பைப் பெறவில்லை.
இந்நிலையில், அரண்மனை 4ஆம் பாகத்துக்கு நேர்மறையான விமர்சனங்கள் குவிந்ததுடன், பாக்ஸ் ஆபிசிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இம்மாதம் 3ஆம் தேதி ‘அரண்மனை 4’ படம் திரையரங்குகளில் வெளியீடானது. கடந்த சில நாள்களில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இது திரையரங்க உரிமையாளர்களே எதிர்பார்க்காத தரமான வசூல் எனவும் சொல்லப்படுகிறது.
இந்தாண்டு ஆரம்பம் முதலே தமிழில் வெளியான தனுஷின் ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’, ரஜினி நடித்த ‘லால் சலாம்’ படங்கள் பெரியளவில் வெற்றிபெறாத நிலையில், ‘அரண்மனை 4’ குடும்பமாக வரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், இப்படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

