‘அநியாயத்துக்கு நல்லவராக இருக்கக்கூடாது’ ஐஸ்வர்யா ராஜேஷ்

‘அநியாயத்துக்கு நல்லவராக இருக்கக்கூடாது’ ஐஸ்வர்யா ராஜேஷ்

2 mins read
f54de922-358f-4cd7-8380-ad36b44dd297
ஐஸ்வர்யா ராஜேஷ். - படம்: ஊடகம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் பரபரப்பாக நடித்து வருகிறார் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் அன்னையர் தினத்தையொட்டி, தன்னை வளர்த்தெடுக்க வாழ்க்கையில் தனது அம்மா பட்ட சிரமங்கள் குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அநியாயத்துக்கு நல்லவராக இருக்கக்கூடாது என்பதைத் தன் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டதாகவும் தன்னம்பிக்கையுடன் செயல்பட அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

“கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக என் அப்பா சிலருக்குக் கையெழுத்துப் போட்டு கடன் வாங்கிக்கொடுத்தார்.

“உடல்நிலை பாதிக்கப்பட்டு எனது தந்தை இறந்ததும் அந்தக் கடன் தொகைகள் முழுவதையும் கட்டவேண்டிய பொறுப்பு எல்லாம் என் அம்மா தலைமீது விழுந்தது.

“எங்களிடம் இருந்த ஒரு நிலத்தை விற்று யாரோ வாங்கிய கடனை என் அம்மா அடைத்தார். அவ்வளவு சிரமத்திலும் எங்களுக்கு சத்தான சாப்பாடு கொடுத்து, நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்கவைத்தார். எங்களை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்.

“என் அண்ணன்கள் இருவரின் படிப்பு முடிந்து வேலையில் சேரப்போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது பெரிய இடி தலையில் விழுந்தது. அவர்கள் இருவருமே ஒரு விபத்தில் இறந்துபோக என் அம்மா உருக்குலைந்தார்.

“இப்படி அடுக்கடுக்காக வந்த துன்பங்களால் என் அம்மா தாங்கமுடியாத துயரத்தை அனுபவித்தார். ஆனாலும் தன்னம்பிக்கையை மட்டும் அவர் இழந்துவிடவில்லை.

“தொழில்ரீதியாக எனக்கு எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் நம்பிக்கையை இழக்காமல் தைரியமாக முன்னுக்குச் செல்வதை என் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

“அநியாயத்துக்கு நல்லவராக இருக்கக்கூடாது என்பதை என் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன்,’’ எனத் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது தந்தை ராஜேஷ் தெலுங்கு சினிமாவில் 50 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய தாத்தா அமர்நாத்தும் ஒரு நடிகர் என்பதால் ஐஸ்வர்யாவின் ஆசையும் திரையுலகம் மீது படர்ந்தது.

‘நீதானா அவன்’ என்ற படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமான இவர், ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து பிரபல நடிகையானார்.

தற்போது இவரது கைவசம் ‘மோகன் தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’, ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’, ‘புலிமட’, ‘துருவ நட்சத்திரம்’, இரண்டு மலையாளப் படங்கள் என பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படி கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மிகவும் பரபரப்பாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

இணையத்தில் எப்போதும் துடிப்பாகச் செயல்பட்டு வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கவர்ச்சிப் புயலாக இன்ஸ்டகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு ரசிகர்களின் ‘லைக்குகள்’ மலை போல் குவிந்து வருகின்றன. இன்ஸ்டகிராமில் அவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்