இந்தியில் பிரபல நடிகையாக இருப்பவர் மனிஷா கொய்ராலா. தமிழில் ‘பம்பாய்’, ‘இந்தியன்’, ‘முதல்வன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2012ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன்னைக் கண்போல் காத்த தாய் குறித்து இந்த அன்னையர் தினத்தை ஒட்டி பகிர்ந்துகொண்டுள்ளார்.
“அனைவரும் அவரவரின் ஆரோக்கியத்தின்மீது அக்கறை காட்டுங்கள். எனக்கு ஏராளமான உறவினர்களுடன் ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது. எல்லோருமே வசதியானவர்கள்.
“ஆனால், நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சமயத்தில் எல்லோரும் என்னைவிட்டு விலகிப் போய்விட்டார்கள். நண்பர்களும் விலகிவிட்டனர். யாருமே என்னைப் பார்க்க வரவில்லை.
“எல்லோரும் பிரிந்து போனாலும் என் பெற்றோர், சகோதரர், சகோதரரின் மனைவி ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். என் தாய் என்னைக் கண்போல் காத்தார். வாழ்க்கையை நம்பிக்கையோடு அணுக வைத்தார். அந்த தருணத்தை நான் ஒருநாளும் மறக்கமாட்டேன். இப்போது நான் இரண்டாவது பிறவி எடுத்துள்ளதுபோல் உணர்கிறேன்.
“எனினும், புற்றுநோய் பாதிப்புக்கு முன்பிருந்ததுபோல் என்னால் இப்போது வேலை செய்ய முடியவில்லை. இப்போதும் நான் அவ்வப்போது மன அழுத்தத்தோடுதான் வேலை பார்க்கிறேன்,” எனக் கூறியிருக்கிறார்.

