ஒற்றுமை வேண்டும்: கமல்

ஒற்றுமை வேண்டும்: கமல்

2 mins read
2d04d1dd-aae7-4c1c-b36b-40389764c019
கமல்ஹாசன் - படம்: ஊடகம்

‘உத்தம வில்லன்’ படம் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், “தமிழ் சினிமா துறையில் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ள வேண்டாம்,” என நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிறுவனரும், திரை உலகின் தந்தை என அழைக்கப்படுபவருமான காலஞ்சென்ற டி.இராமானுஜத்தின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

அந்த விழாவில் கமல்ஹாசன் பங்கேற்றார். 

“சினிமா துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ராமானுஜம். நவீனத்தை வரவேற்கும் முற்போக்குச் சிந்தனையுடன் தமிழ் சினிமாவிற்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கிய முன்னோடி அவர்,” என்று பாராட்டினார் கமல்.

திரு இராமனுஜத்துடனான எனது நெடுநாள் நட்பையும், அவரது குடும்பத்துடனான உறவு குறித்தும் கமல் பேசினார். 

“சினிமா துறையில் பல பிரச்சினைகள், விவாதங்கள் எழுந்தாலும், ஒருவரையொருவர் அதிகமாக திட்டிக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

உத்தம வில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸின் லிங்குசாமி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், திரைத்துரையில் ஒருவரை ஒருவர் வசைபாடக் கூடாது என கமல் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2015 ஆம் ஆண்டு லிங்குசாமி தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’ திரைப்படம் வெளியானது. இது வணிக ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்தது. மேலும், கமல் மீது பட விநியோக சங்கத்தினர் விதித்த தடையை நீக்குவதற்கு நிதிச்சுமை ஏற்பட்டதாக லிங்குசாமி தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்தனர்.

இதற்கு பொறுப்பேற்ற கமல்ஹாசன், உத்தம வில்லன் திரைப்படத்தில் ஏற்பட்ட இழப்பிற்குப் புதிய படத்தில் நடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், 9 ஆண்டுகள் ஆகியும், ஒப்புக்கொண்டபடி தங்களது தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்காமல் இழுத்தடிப்பதாக ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு இரண்டு வருடங்களாக அவரது நடிப்பில் படங்கள் எதுவும் வரவில்லை.

இந்நிலையில் வரும் ஜூன் மாதம் கமல்ஹாசன் நடித்த `இந்தியன் 2,’ ‘கல்கி 2898 ஏடி’ ஆகிய இரண்டு படங்களும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. `கல்கி 2898 ஏடி’ படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன் கமல்ஹாசன் நடித்துள்ளார். ஒரே மாதத்தில் இரண்டு கமல் படங்கள் வெளியாகவிருப்பதால் அவரின் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்