யுவன் படத்தில் ரியோ ராஜ்
தொலைக்காட்சித் தொடர் நடிகராகவும் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் ரியோ ராஜ். அவர் தற்போது திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடித்த ‘ஜோ’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்தப் படத்தில் மாளவிகா மனோஜ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் என்றும் இப்படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு காதல் பாட்டுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
நடிகை அனுஷ்காவுக்குத் திருமணம்
தென்னிந்திய திரைப்படங்களில் நட்சத்திர நடிகையாக வலம்வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா எனப் பல பிரபலங்கள் படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே பிரபல நடிகையானவர்.
அனுஷ்கா ஷெட்டியின் திருமணம் பற்றிய செய்திகள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளியான வண்ணம் இருந்த நிலையில், தற்போது 42 வயதான நடிகை அனுஷ்கா, கன்னட தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.
கதாநாயகனாகும் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய்
எஸ்.ஏ.சந்திரசேகரில் ஆரம்பித்து ஷங்கர் வரை இயக்குநர்களின் வாரிசுகள் நடிக்கக் களமிறங்கிய வரிசையில் இப்போது விக்ரமன் மகனும் இணைந்திருக்கிறார். ‘ஹிட் லிஸ்ட்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா. இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில், விக்ரமன், அவரது மகன் விஜய் கனிஷ்கா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோரை நடிகர் விஜய் சந்தித்துள்ளார். அப்போது கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள விக்ரமன் மகனுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்தார். இந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
சூர்ய கதிர் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் மேனன், சமுத்திர கனி, உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து விரைவி படம் திரைக்கு வர இருக்கிறது.

