பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று அங்கு அசத்திக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா தான் அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகை. விஜய்யின் தமிழன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். பாலிவுட்டில் பெரிய நடிகையான பிறகு ஹாலிவுட் சென்று வெற்றியும் கண்டார்.
42 வயதாகும் பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸை மணந்துள்ளார். பிரியங்காவை விட அவர் 10 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தித் திரையுலகை விட்டு பிரியங்கா ஒதுங்கியிருக்கிறார். அதற்கு அங்கு நிலவும் அரசியல்தான் காரணம் என்கிறார் நடிகை பிரியங்கா சோப்ரா.
தொடர்ந்து ஹாலிவுட் படங்கள், வெப்தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் படம் வெப்தொடர் ஆகியவற்றில் நடிக்க ரூ. 40 கோடி சம்பளம் வாங்குகிறார்.
ருஸோ சகோதரர்களின் சிடாடல் வெப்தொடரில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு ரூ. 40 கோடி சம்பளம் தரப்பட்டது. திரையுலகில் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்படுகிறது என பல முன்னணி நடிகைகள் பேசி வரும் சூழலில் அதுகுறித்து பிரியங்கா சோப்ராவும் பேசியிருக்கிறார்.
கடந்த ஆண்டு நேர்காணல் ஒன்றில், “நான் 22 ஆண்டுகளாக இந்த திரைப்படத்துறையில் இருக்கிறேன். 70 படங்கள், 2 டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன்.
“ஆனால் சிடாடலில் நடித்தபோது தான் முதல் முறையாக என் சக நடிகருக்கு இணையான சம்பளம் கிடைத்தது. 22 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு நடந்திருக்கிறது,” என பிரியங்கா சோப்ரா கூறினார்.
மேலும், ‘நடிகர்களை போன்றே நானும் கடினமாக உழைக்கிறேன். ஆனால் அவர்களை விட எனக்கு குறைவான சம்பளம் அளிக்கப்படுகிறது. அதனால் திரையுலகில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி பேச விரும்புகிறேன்,” என்றார் பிரியங்கா.
இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோன், ஆலியா பட், திரிஷா, நயன்தாரா ஆகியோரும் இருக்கிறார்கள்.
ரித்திக் ரோஷனின் ஃபைட்டர் படத்தில் நடிக்க தீபிகாவுக்கு ரூ. 15 கோடி முதல் ரூ. 20 கோடி வரை சம்பளம் வழங்கியதாகக் கூறப்பட்டது. தக் லைஃப் படத்தில் நடிக்க திரிஷாவுக்கு ரூ. 12 கோடி கொடுத்திருக்கிறார்கள். நயன்தாரா படம் ஒன்றுக்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறார்.

