தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாக தடம்பதித்தவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவையில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த சூழலில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த கோவை சரளா 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார்.
கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ நகைச்சுவையும், நடனம் ஆடும் நகைச்சுவையும் கோவை சரளாவின் நடிப்புத் திறமைக்கு பெரும் சான்று.
கோவை சரளாவுக்குத் தற்போது 62 வயதாகிறது. அவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதற்கு விளக்கமளித்திருந்தார். அந்த நேர்காணலில், “பிறக்கும்போது தனியாகத்தான் பிறக்கிறோம். அதேபோல் இறக்கும்போதும் தனியாகத்தான் இறக்கிறோம். இடையில் இந்த உறவுகள் எனக்குத் தேவையில்லை த்த் தோன்றியது,” எனக் கோவை சரளா கூறியிருந்தார்.
மேலும், சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட பல பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளால் கைவிடப்பட்டு இன்று தனியாக வாழ்ந்துவருகிறார்கள். யாரையும் சார்ந்து எனக்கு வாழப் பிடிக்கவில்லை” என்றார் கோவை சரளா.

