தன்னுடைய வழியைத் தேர்வு செய்து தெளிவாகச் சென்று கொண்டிருப்பதாகச் சொல்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா.
இது தொடர்பாக தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்னைப் பற்றி நாள்தோறும் ஏதோ ஒரு வகையில் காணொளி வெளி வருவதை தாம் அறிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“இதுகுறித்து எனக்கு வேண்டியவர்கள் தகவல் சொல்வார்கள். எனினும், நான் இதில் எல்லாம் கவனம் செலுத்துவதில்லை.
“ஏனெனில் பிறரைக் கவனிப்பது எனது வேலையல்ல. என்னுடைய பணிகளைக் கவனிப்பதுதான் என் வேலை. என் வழியில் மிகத் தெளிவாகச் சென்று கொண்டிருக்கிறேன்.
“நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் கடந்த 35 நாள்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். இந்தத் தகவலை ரசிகர்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.
சினிமா இசை வேறு, பின்னணி இசை வேறு என்று குறிப்பிட்டுள்ள அவர், இவை எல்லாம் பிரதிபலித்தால் அது சிம்பொனி இசை கிடையாது எனக் கூறியுள்ளார்.
“திரைப்படங்களுக்கு இசையமைப்பது, இடையில் விழாக்களுக்குச் சென்று தலைகாட்டுவது என்றிருந்தாலும், ஒரு சிம்பொனியை 35 நாள்களில் எழுதிவிட்டேன்,” என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

