‘பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன்’

‘பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன்’

3 mins read
8fa4ce03-14c0-4109-b500-27a3b08b24d4
ப்ரீத்தி. - படம்: ஊடகம்

’அயோத்தி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ப்ரீத்தி அஸ்ராணி. தற்போது ‘எலக்சன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘கவின்’ படத்தில் இவர்தான் கதாநாயகி. மேலும், ஒரு பெரிய இயக்குநரின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.

ப்ரீத்தியின் பூர்வீகம் குஜராத் என்றாலும், பல ஆண்டுகளுக்கு முன்பே மொத்த குடும்பமும் ஹைதராபாத்தில் குடியேறிவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆங்கிலம் குஜராத்தி, இந்தி, ஸ்பனீஸ் என ஏழு மொழிகளில் பேசி அசத்துகிறார் இந்த இளம் நாயகி.

சிறு வயது முதலே இவருக்கு மொழிகளைக் கற்பதில் ஆர்வம் அதிகமாம். எதிர்காலத்தில் தனது திறமையை வெளிபடுத்த பல மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பது பயனளிக்கும் எனக் கருதியதால் மொழிகளைக் கற்றதாகச் சொல்கிறார்.

“நான் ’அயோத்தி’ படத்தில் நடிக்கும் முன்பே தமிழில் பேசக் கற்றுக்கொண்டேன். கதைக்களம் ஒரு கிராமப் பகுதியாக அமையும்போது வட்டார மொழியில் பேசுவது அவசியம். இவ்வாறு செய்வது படம் தரமாகவும் யதார்த்தமாகவும் உருவாக உதவும்.

“மேலும் குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலை திரையில் துல்லியமாகக் கொண்டுவர இயலும்.

“என்னுடைய முதல்படம் தெலுங்கு மொழியில் வெளியானது. எனது மூத்த சகோதரி அஞ்சி அஸ்ராணி கடந்த 20 ஆண்டுகளாக தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவருக்குச் சொந்தமாக தயாரிப்பு நிறுவனமும் உள்ளது. ‘அயோத்தி’ படத்திலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

“அவருடன் பல்வேறு படப்பிடிப்புகளுக்குச் சென்று வந்த பிறகே எனக்கும் சினிமா மீதான ஆர்வம் அதிகரித்தது,” என்கிறார் ப்ரீத்தி.

தன்னுடைய சகோதரிதான் தமது முன்னோடி என்று குறிப்பிடும் இவர், கடந்த 2017ஆம் ஆண்டிலேயே தெலுங்கில் நடிக்கத் தொடங்கிவிட்டார். ‘அயோத்தி’ படத்தைப் பார்த்த பலர், இவருடைய கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டி உள்ளனர். அந்தப்படம் வெளியாகும் முன்பே ‘எலக்சன்’ தமிழ் படத்தில் ஒப்பந்தமாகிவிட்டார்.

“இயக்குநர் தமிழ் கூறிய கதை மீது எனக்கு நூறு விழுக்காடு நம்பிக்கை இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் மிக வலுவான அம்சங்களால் கட்டமைக்கப்பட்டு இருந்தது. எனவே, தயக்கம் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.

“தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. பெரும்பாலான காட்சிகளை ஆம்பூர் பகுதியில் படமாக்கினர். இதற்காக அந்தப் பகுதியிலேயே தங்க வேண்டி இருந்தது.

“ஊர் மக்கள் என்னிடம் மிக அன்பாக நடந்து கொண்டனர். இப்படியெல்லாம் அன்பைப் பகிர முடியுமா என்று வியந்து போனேன்.

“படத்தின் நாயகன் விஜயகுமாருடன் பணியாற்றியதும் நல்ல அனுபவமாக அமைந்தது. ஒவ்வொரு காட்சியும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதில் கறாராக நடந்துகொள்வார்.

“யதார்த்தமான நடிப்புதான் படத்துக்கு மட்டும் அல்லாமல் கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பவர்களுக்கும் நல்லது என்பார். தொழில்நுட்ப அறிவும் மிகுந்தவர்.

“அதே போல் இயக்குநர் தமிழ் கதையை என்னிடம் விவரித்தபோதே அதை முழுமையாக உள்வாங்கிக் கொண்டேன். திரையுலகம் மீது தீராத காதல் கொண்டவர் இவர். ஒவ்வொரு காட்சியையும் எப்படி படமாக்க வேண்டும் என்பதை தனது மனத்திரையில் துல்லியமாகப் பதிவு செய்து வைத்திருப்பார்.

“இந்தப் படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைக்கிறது எனில் அதற்கு இவர்கள்தான் காரணமாக இருப்பார்கள்,” என்கிறார் ப்ரீத்தி.

அண்மைக்காலமாக திரையுலகில் நடிகைகளுக்கும் நல்ல வரவேற்பும் வாய்ப்புகளும் கிடைப்பதாகச் சொல்பவர், முன்பெல்லாம் கதாநாயகிகள் இரண்டு மூன்று காட்சிகளில் மட்டுமே வந்துபோகும் நிலை இருந்தது என்கிறார்.

“இப்போதெல்லாம் ஒரு கதைக்கு ஏன் கதாநாயகி தேவை என்பதைப் பதிவு செய்யும் அளவுக்கு நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவ்வளவு ஏன், நாயகியை முன்னிலைப்படுத்தி வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாமே கண்கூடாகப் பார்க்கலாம்,” எனச் சொல்லும் ப்ரீத்தி, பெண்கள் அனைத்துத் துறையிலும் சாதிக்க விரும்பினால் மிகுந்த துணிச்சலும் நம்பிக்கையும் தேவை என்கிறார்.

“ஒரு பெண்ணின் பலம் என்பதே அவர் பெண்ணாக இருப்பதுதான். பெண்கள் கடவுள் படைப்பில் சிறப்பானவர்கள். இன்றுள்ள பல பெண்கள் பல்வேறு திறமைகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.

“அலுவலகம், வீடு, பொதுவெளி, சமூக வலைத்தளங்கள், நட்பு வட்டம் எனப் பல்வேறு இடங்களில் தங்களுடைய திறமையால் அறியப்படுகிறார்கள்.

எனவே, பெண்ணாகப் பிறந்ததற்குப் பெருமைப்படுகிறேன்,” என்கிறார் ப்ரீத்தி.

குறிப்புச் சொற்கள்