அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் உருவாகிறது ‘நிறம் மாறும் உலகில்’ திரைப்படம்.
இது அன்புக்காக அலைகிறவர்களின் வாழ்க்கைச் சித்திரம் என்கிறார் இயக்குநர்.
“நேர்த்தியாக உடை உடுத்துவது முக்கியம் கிடையாது. உள்ளே ஒரு நிறம் இருக்கிறது. ஒரு சமயம் எல்லாமே மாறும்.
“அந்தச் சூழலில் மிருகமாக ஆகப்போகிறோமா அல்லது மனிதனாக நடந்துகொள்ளப் போகிறோமா என்பதுதான் முக்கியம். இந்தப் படம் இதை அலசுகிறது,” என்கிறார் பிரிட்டோ.
பாரதிராஜா, நட்ராஜ், சாண்டி, ரியோ உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
அண்மையில் வெளியான இப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்புக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட நான்கு பேரும் வேறு முகத்துடன் காட்சியளிப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
“நான் நடிகனாக வாழ்க்கையைத் தொடங்கினேன். சில இசைத் தொகுப்புகள், விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகளை இணைக்கும் ஒரு புள்ளி என இந்தப் படம் திரையில் விரிவடையும். இரண்டு பேர் பேசுவது வழியாக கதை விரியும்படி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
“மும்பை, சென்னை, வேளாங்கண்ணி, துவரங்குறிச்சி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் கதை நடக்கிறது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படம்.
‘‘இங்கே கதைக்காகவோ, களத்துக்காகவோ அலையவேண்டிய அவசியமே இல்லை. பக்கத்தில் இருந்து ஒருவரை ஆழமாகப் பார்க்கிறீர்கள் எனில், அதுவே கதை. அவனுடைய வீடு வரை செல்கிறீர்கள் எனில், அதுவே களம்.
“இந்த உலகமே நம்மைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுவோம். ஆனால் நாம் யாரையும் திரும்பிப் பார்ப்பது கிடையாது.
“அப்படி இந்த வாழ்க்கையையும் மனிதர்களையும் தேடினால் ஆயிரம் கதைகள் உள்ளன. அதில் சில மனிதர்களின் கதைதான் இந்த ‘நிறம் மாறும் உலகில்’ என்ற படம்,” என்கிறார் பிரிட்டோ.
திரையில் காணப்போகும் அனைவருமே அன்றாடம் நாம் எதிர்கொள்கிற மனிதர்கள்தான் என்றும் அவர்களின் வாழ்க்கைக்குள் நுழைந்து ஆழமாக அலசப்போகும் படம் இது என்றும் சொல்கிறார்.
“உணர்வில் வாழ்பவன்தான் மனிதன். நான்கு மனிதர்களை எடுத்துக்கொண்டு அவர்கள் வாழ்க்கையின் உள்ளே நுழைந்து பார்க்கப் போகிறோம்.
“அந்த வகையிலும் இது முக்கியமான படமாக அமைய வேண்டும் என்பது என் கனவு,” என்கிறார் இயக்குநர் பிரிட்டோ.