‘வெயில்’, ‘அங்காடித் தெரு’ படங்கள் மூலம் தமிழ் சினிமா உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் வசந்தபாலன்.
இப்போது, ‘தலைமைச் செயலகம்’ இணையத்தொடரை உருவாக்கி வருகிறார். இது கூர்மையான அரசியல் படமாக இருக்குமாம்.
பல இயக்குநர்கள் இணையத்தொடரை இயக்கத் தயங்கும் நிலையில், வசந்தபாலன் இத் தகைய முயற்சியில் ஈடுபட்டது பலருக்கு வியப்பளித்துள்ளது.
“கொஞ்சம் சுதந்திரமாக எனக்குப் பிடித்ததைச் செய்யலாம், அதற்கு இணையத்தொடர்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். இத்தொடருக்காக நான் முதலில் யோசித்த கதை வேறு.
“இந்தியாவில் இருக்கும் குறைந்த கட்டண தங்குவிடுதிகளில் என்ன நடக்கிறது, அங்கு என்ன மாதிரியான மனிதர்கள் வந்து செல்கிறார்கள்? குற்றச் செயல்கள், தனிப்பட்ட ரகசியங்கள் எல்லாம் அங்குதான் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன.
“ஏராளமான ரகசியங்கள், கதைகள் அங்கு இருக்கின்றன. இதையெல்லாம் வைத்து ஒரு கதை செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதைச் செய்ய முடியவில்லை. பிறகுதான், அரசியல் பேசும் இந்த ‘தலைமைச் செயலகம்’ கதையை தேர்வு செய்தோம்,” என்கிறார் வசந்தபாலன்.
கோடம்பாக்கத்தில் இதுவரை கூர்மையான அரசியல் கதைகள் திரைகாணவில்லை எனக் குறிப்பிடுபவர், இந்தித் திரையுலகில் சில நேர்த்தியான படைப்புகள் வெளிவந்துள்ளதாக விகடன் ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கூர்மையான அரசியலைப் பேசும் படங்களை உருவாக்குவதில் தயக்கம் கூடாது என்றும் அரசியலில் என்ன நடக்கிறது, அரசியல்வாதிகள் எப்படி பேசிக்கொள்வார்கள் என்பதைப் பற்றியெல்லாம் இன்னும் தமிழ் சினிமாக்களில் அழுத்தமான பதிவுகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார் வசந்தபாலன்.
தொடர்புடைய செய்திகள்
“இதற்கு முன்பு ‘அமைதிப்படை’ படத்தில் இரண்டு மூன்று உரையாடல்கள், ‘இருவர்’ படத்தில் ஒருசில உரையாடல்கள், ‘மாமன்னன்’ படத்தில் அரசியல் கட்சிகளில் வட்டம், மாவட்டங்களில் நடக்கும் பிரச்சினைகள் குறித்த ஒருசில காட்சிகள் என சில இடங்களில் மட்டுமே அரசியல் பேசப்பட்டிருக்கின்றன.
“ஆனால், முழுமையாக அரசியல் கட்சிகளில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய கதைகள், கூர்மையான அரசியலைப் பேசும் அழுத்தமான உரையாடலை நிகழ்த்தும் கதைகள் தமிழ் சினிமாவில் இன்னும் வரவில்லை என்றே கருதுகிறேன்,” என்கிறார் வசந்தபாலன்.
‘தலைமைச் செயலகம்’ இணையத்தொடருக்காக ஒன்றரை ஆண்டுகள் உட்கார்ந்து கதை எழுதினாராம். கதையை காட்சிப்படுத்தும் வரை நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாகக் கூறுகிறார்.
“எனக்கும் அரசியல் பார்வை இருக்கிறது. அரசியல் பற்றிய நிறைய சம்பவங்களைப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன். அதையெல்லாம் வைத்து இந்த ‘தலைமைச் செயலகம்’ கதையை எழுதினேன்.
“இந்தக் கதைக்களத்தில் நான் பேச வேண்டிய அரசியலைப் பேசியிருக்கிறேன்,” என்கிறார் வசந்தபாலன்.


