கோடம்பாக்கத்திற்கு அண்மையில் வந்து சேர்ந்த இளம் நாயகிகளில் ஒருவர் நிகிதா. தற்போது ‘ஒரு நொடி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
சிறு வயது முதலே ஏராளமான திரைப்படங்களைப் பார்த்து ரசிப்பதுதான் இவரது முக்கியமான பொழுதுபோக்காம். இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியது தனது பாட்டி என்கிறார்.
“சிறு வயதில் பாட்டி வீட்டில்தான் நான் அதிகம் தங்கியிருப்பேன். பழைய திரைப்படங்களைப் பார்ப்பதுதான் பாட்டியின் முக்கியமான பொழுதுபோக்கு. அவருடன்தான் பெரும்பாலும் இருப்பேன் என்பதால் பழைய படங்களைப் பார்க்கும் பழக்கம் இயல்பாகவே எனக்கும் வந்து விட்டது. அதிலும் குறிப்பாக காலஞ்சென்ற எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரின் படங்களைத்தான் பாட்டி அதிகம் பார்ப்பார்.
“பெரும்பாலும் கறுப்பு, வெள்ளை படங்களைத்தான் அதிகம் பார்த்துள்ளேன். என்னுடைய பள்ளி வாழ்க்கை முடிவதற்குள் தமிழ் சினிமாவின் பழைய படங்கள் அனைத்தையுமே பார்த்திருப்பேன் எனத் தோன்றுகிறது,” என்று சொல்லிச் சிரிக்கும் நிகிதா, படிப்பிலும் சோடைபோகவில்லை.
சிறு வயதில் நன்றாக ஓவியம் தீட்டுவாராம். இந்தத் திறமையை வளர்த்துக்கொள்ளுமாறு பலர் அறிவுரை கூறியுள்ளனர். ஒரு கட்டத்தில் கணினி, அனிமேஷன் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டதாம்.
அதனால் ‘கிராஃபிக் டிசைனிங்’ துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். நிகிதாவின் பூர்வீகம் பெங்களூரு. தந்தையின் பணி நிமித்தமாக சில காலம் ஹைதராபாத்தில் வசித்ததாகவும் பிறகு சென்னையில் குடியேறிவிட்டதாகவும் சொல்கிறார்.
பக்கத்து வீட்டுப் பெண் என்று சொல்லும் வகையில் உள்ள தோற்றம்தான் தனது பலம் என்று குறிப்பிடுபவர், யதார்த்தமான கதை, கதைக்களங்களில் நடிப்பதுதான் தனது விருப்பம் என்கிறார்.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகைகள் சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி ஆகியோர்தான் தமக்கு முன்மாதிரி என்று சொல்பவர், இம்மூன்று நடிகைகளின் முக பாவங்கள், கண்களாலேயே உணர்வுகளை வெளிப்படுத்தும் நேர்த்தி ஆகியவற்றை பின்பற்றுகிறாராம்.
தொடர்புடைய செய்திகள்
“அவர்களைப் போலவே வீட்டில் நடித்துப் பார்ப்பேன். இப்படித்தான் எனது நடிப்பு ஆர்வம் வளர்ந்தது. சினிமா துறையைத் தேர்வு செய்ததாகக் கூறியபோது வீட்டில் சிவப்புக் கொடிதான் காட்டப்பட்டது. எனினும் என்னுடைய ஆர்வத்தைக்கண்டு பின்னர் சம்மதம் தெரிவித்தனர்.
“பெரும்பாலான நடிகைகள் மாடலிங் துறை, விளம்பரங்களில் பங்கேற்று அதன்மூலம் திரையுலகுக்கு வருவார்கள். சிலருக்கு சின்னத்திரை அனுபவம் கைகொடுக்கும். ஆனால் எனக்கோ எந்தவிதமான மெனக்கெடலும் இல்லாமல் வாய்ப்பு தேடி வந்தது.
“கதாநாயகியைத் தேர்வு செய்யும் பொருட்டு, ‘3.6.9’ என்ற படத்துக்கு நடிப்புத் தேர்வு நடைபெறுவதை அறிந்தேன். அதில் பங்கேற்று சில காட்சிகளை நடித்துக்காட்டியதும் உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டேன்.
“இந்தப் படத்தின் நீளம் 81 நிமிடங்கள்தான். எந்தவிதமான வெட்டும் இல்லாமல், காட்சிகள் வரிசையாகத் திரையில் தோன்றும். இது ஓர் உலக சாதனை என்ற பெருமையைப் பெற்றது.
“சாதனை படைத்த படத்தில் எனது பங்களிப்பும் உள்ளது என்பதை பெருமையாகக் கருதுகிறேன்,” என்று சொல்லும் நிகிதா, அடுத்து நடித்துள்ள படம் ‘ஒரு நொடி’.
கதைப்படி இவர் கதாநாயகி அல்ல. எனினும், தனது கதாபாத்திரத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என இயக்குநர் உறுதி அளித்தாராம்.
“இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படுவதே ஒரு நடிகையின் கடமை. அதை சரிவரச் செய்வேன்.
“முதலில் ரசிகர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதைச் சாதித்து விட்டால் நமது விருப்பங்கள் தன்னால் நிறைவேறும். தற்போது இது மட்டுமே எனது கவனத்தில் உள்ளது,” என்கிறார் நிகிதா.

