ரசிகர்கள் எனக்குப் புதுப் பொறுப்பைத் தந்துள்ளனர்: சித்தார்த்

2 mins read
316a94d5-c7b3-4b9d-919f-84a0283c0cad
சித்தார்த். - படம்: ஊடகம்

இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார் சித்தார்த்.

‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் ஸ்ரீகணேஷ். இந்நிலையில், சித்தார்த் நடிப்பில் உருவாகும் அவரது நாற்பதாவது படத்தை இயக்க உள்ளார்.

“ஸ்ரீகணேஷ் போன்ற இளம் திறமைசாலியுடன் இணைவதில் மகிழ்ச்சி. சினிமா ஆர்வலர்களும் குடும்பத்தினரும் ‘சித்தா’ படத்துக்கு நல்ல ஆதரவை வழங்கி உள்ளனர்.

“இதன் மூலம் பார்வையாளர்களின் உணர்வுகளுடன் ஈர்க்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற பொறுப்பை அந்தப் படம் கொடுத்தது.

“சித்தா’ படத்திற்குப் பிறகு பல கதைகளைக் கேட்டேன். ஆனால், ஸ்ரீகணேஷ் சொன்ன கதை உடனே பிடித்துவிட்டது. பார்வையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் ஒரு அழகான திரைப்படமாக இருக்கும் என நம்புகிறேன். அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்,” என்று சித்தார்த் கூறியுள்ளார்.

தனது புதுப்படத்துக்கான கதையை எழுதத் தொடங்கியபோதே, சித்தார்த்தான் நாயகனாக நடிக்க பொருத்தமானவராக இருப்பார் என்று தாம் நம்பியதாகத் தெரிவித்தார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.

“பின்னர் அக்கதையை சித்தார்த்திடம் விவரித்தபோது, முழு ஈடுபாட்டோடு கேட்டு ரசித்தார். அவரது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.

“இப்படத்தில் நடிப்பதற்காக திரைத்துறையில் உள்ள மற்ற பெரிய நடிகர்களுடனும் பேசி வருகிறோம். அதில் நமக்குப் பிடித்தமான திரைத்துறை நட்சத்திர ஜோடிகளும் உள்ளனர்,” என்று ஸ்ரீகணேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்படம் தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், ‘இந்தக் கதை எல்லைகளைக் கடந்த, உலகளாவிய கதைகளில் ஒன்றாக இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சிவகார்த்திகேயேன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘மாவீரன்’ படத்தைத் தயாரித்த அருண் விஷ்வா, தன்னுடைய சாந்தி டாக்கீஸ் பேனரில் தயாரிக்கிறார்.

அருண்குமார் இயக்கத்தில், சித்தார்த் நடிப்பில் வெளியான ‘சித்தா’ திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் இடம் பெற்ற ‘உனக்குத்தான்’ பாடல் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

அடுத்து, கமல்ஹாசனுடன் சித்தார்த் இணைந்து நடித்திருக்கும் ‘இந்தியன் 2’ விரைவில் வெளியாக இருக்கிறது.

இதற்கிடையே, இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இதில் சித்தார்த் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் மாதவன், நயன்தாரா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் நீண்ட காலமாக காதலித்து வந்ததை அண்மையில் ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், இருவரும் மீண்டும் விரைவில் இணைந்து நடிப்பார்களா எனும் கேள்வி எழுந்துள்ளது.

நல்ல கதை அமைந்தால் இருவரும் இணைந்து நடிப்பது சாத்தியம் என்று சித்தார்த் தரப்பில் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்