பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் எப்போது வெளியானாலும் பெரும் வெற்றியைப் பெறும் என்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ள அவர், பட வெளியீட்டுக்காக ஆர்வமுடன் காத்திருப்பதாகச் சொல்கிறார்.
‘தங்கலான்’ படத்தில் மாளவிகாவுக்கும் சில சண்டைக் காட்சிகள் உள்ளன. அதற்காக சிலம்பம் கற்றுக்கொண்டார்.
சிலம்பத்திற்காகப் பயிற்சி எடுக்கும் காணொளிகளையும் அவ்வப்போது இணையத்தளத்தில் பகிர்ந்து வந்தார் மாளவிகா.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த பிறகும் தொடர்ந்து சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவருடன், அண்டை வீட்டில் வசிக்கும் தோழியும் பங்கேற்றுள்ளார்.
இருவரும் சேர்ந்து காணொளிகள் வெளியிட்டு வருகின்றனர்.
“சிலம்பம் சுற்ற இதுபோன்ற ஒரு தோழி கிடைப்பது அருமை,” என்று அத்தோழி குறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் மாளவிகா.
இந்தித் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ள மாளவிகா, தற்போது மும்பையில் குடியேறிவிட்டார். அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சொந்தமாக வீடு வாங்கியுள்ளாராம்.