நாயகனாக நடிப்பதற்கே தொடர்ந்து வாய்ப்புகள் வருவதாகவும் நகைச்சுவை வேடத்துக்கான வாய்ப்புகள் வருவதில்லை என்றும் கூறியுள்ளார் நடிகர் சூரி.
“நகைச்சுவை வேடத்தில் நடிக்கும்பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டுச் சென்றுவிடுவேன். ஆனால், நாயகனாக நடிப்பதால் இப்போது அதிகம் பொறுப்புகள் கூடி உள்ளன.
“நாயகனாக நடிக்க வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளவேண்டும் எனபதற்காக நிறைய உழைக்கிறேன்.
“சினிமாவில் எந்த இடமும் காலியாக இருக்காது. அந்தந்த இடத்திற்கும் ஆட்கள் வந்துகொண்டே இருப்பார்கள். சினிமா அதற்கான ஆளைத் தேர்வு செய்துவிடும்,” எனக் கூறியுள்ளார் சூரி.
‘விடுதலை’ படத்தில் நாயகனாக நடித்துள்ள சூரியின் நடிப்பில் வரும் 31ஆம் தேதி வெளிவர உள்ளது ‘கருடன்’ படம். இதனை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார். சூரியுடன் சசிகுமார், ரேவதி சர்மா, ஷிவதா, சமுத்திரகனி, மைம்கோபி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
படக்குழுவினருடன் படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்வுக்கு கோவை சென்ற சூரி, அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, “விடுதலை’ படத்திற்குப் பிறகு ரசிகர்கள் என்னை நகைச்சுவை நடிகன் என்பதையும் தாண்டி வேறொருவனாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
“விடுதலை’ படத்தில் சிரமப்பட்டு நடித்ததைப் போலவே “கருடன்’ படத்திலும் நடித்திருக்கிறேன். அதற்கான பலன் கண்டிப்பாக கிடைக்கும்,” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சூரி.