இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதைத் தனது திரையுலகப் பயணம் கற்றுக்கொடுத்துள்ளதாகக் கூறுகிறார் நடிகை அனுமோல்.
இவர் மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழ்ச் சினிமாவில்தான் முதன்முதலாக அறிமுகமானார்.
அதன்பின்னர், மலையாளப் படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து மாலிவுட்டில் தனி முத்திரை பதித்துள்ளார் அனுமோல்.
நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழ்த் திரையுலகில் மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ள நடிகர் `மைக்’ மோகனின் ஜோடியாக `ஹரா’ படத்தில் அனுமோல் இணைந்துள்ளார். இப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
‘ஹரா’ குறித்தும் மோகனுடன் நடித்தது குறித்தும் தனது எண்ணங்களை ஊடகச் செய்தியாளர் களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் அனுமோல்.
“சிறு வயது முதலே மோகனின் பாடல்களைக் கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். அவரது படங்களைப் பார்த்துத்தான் சினிமா மீது எனக்கு மோகம் வந்தது. இன்றைக்கு அவர்கூடவே இணைந்து நடித்திருப்பதை நினைக்கும்போது இதயம் படபடக்கிறது.
“அவருடன் நடிக்கும்போது எனக்கு `ராஜராஜ சோழன் நான்’ பாடல்தான் நினைவுக்கு வந்தது. அவரிடம் நிறைய கதைகள் பேசுவேன். இந்தப் படத்தில் அவரின் மனைவியாக நடித்துள்ளேன். தொலைந்துபோன பெண்ணைக் காப்பாற்றுவது பற்றியதுதான் படத்தின் கதை. இன்னும் படத்தில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் உள்ளன,” என கண் சிமிட்டுகிறார் அனுமோல்.
நடிக்க வரும் வாய்ப்புகள் திருப்தியான பாத்திரங்களாக அமைய வேண்டும் என்பதுதான் என் எதிர்பார்ப்பு என்பவர், “தமிழில் `திலகர்’, `ஒரு நாள் இரவில்’ படங்களில் நடித்து முடித்தபின்னரும் ஒரேமாதிரியான வேடங்களே வந்தன.
தொடர்புடைய செய்திகள்
“விதவிதமான கதாபாத்திரங்களில் மிகவும் வித்தியாசமாக நடிக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.
“ஒரே மாதிரியான பாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றியது. அதனால்தான் திரையுலகில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக்கொண்டேன்.
“மாறுபட்ட கதாபாத்திரங்கள் வரும்போது நிச்சயம் அதை நழுவவிடமாட்டேன்,” என்கிறார் அனுமோல்.
தனது திரைப்பயணம் இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை என்பதைத் தனக்குக் கற்றுத் தந்துள்ளதாகச் சொன்னவர், “தற்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியீடாகின்றன. இதனால் ஒவ்வொரு விஷயமும் மாறும்.
“எனது படம் வெளியீடானால் ஒரு மாதிரியும் படம் வராதபோது ஒரு மாதிரியும் நடந்துகொள்வார்கள்.
“அத்துடன், எனது படங்களின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தும் ஒரு மாதிரியாக நடத்துவார்கள். இதேபோல்தான் திரையுலகில் கிடைக்கும் நண்பர்களும்.
“அடுத்தடுத்த படத்துக்குப் போகும்போது அதிகமான நண்பர்கள் கிடைப்பார்கள், படம் இல்லையேல் நண்பர்களும் கை கழுவிவிடுவார்கள். இதை வைத்துதான் இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை எனச் சொல்கிறேன். இந்த விஷயத்தைத்தான் நான் சினிமாவில் புரிந்துகொண்டேன்,” என்கிறார் அனுமோல்.
அடுத்தது தமிழில் ஒரு படத்திலும் மலையாளத்தில் மறுபடியும் ஒரு திகிலூட்டும் படத்திலும் நடிக்கிறேன். சில படங்களைப் பார்க்கும்போது நான் ரொம்பவே உடைந்து அழுதுவிடுவேன்.
மோகன் மிகவும் பண்பாக அனைவரிடமும் பழகுவார். அவரது காட்சிகள் முடிந்தாலும் படப்பிடிப்புத் தளத்தில் காத்திருந்து பல விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பார்.
முக்கியமாக, மோகனுக்கு பெண் ரசிகர்கள் மிகவும் அதிகம். படப்பிடிப்புத் தளத்துக்கு அவரைப் பார்ப்பதற்காகவே வரும் பெண் ரசிகர்களை அவ்வளவு அன்பாக அவர் சந்திப்பார், பேசுவார்.
யோகா செய்வதில் ஆர்வம் உடையவர் அனுமோல். பரதநாட்டியம் ஆடுவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் அடிக்கடி நிகழ்ச்சிகளில் நடனமாடி வருகிறார்.
நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்பும் அனுமோலுக்கு இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.


