இன்னல்களுக்கு இடையில் உருவான படம் ‘பகலறியான்: வெற்றி

இன்னல்களுக்கு இடையில் உருவான படம் ‘பகலறியான்: வெற்றி

3 mins read
78841aff-9d40-4577-b587-a591e209c39a
நடிகர் வெற்றி. - படம்: ஊடகம்

’எட்டுத் தோட்டாக்கள்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் நடிகர் வெற்றி.

தற்போது இவர் நடித்துள்ள ‘பகலறியான்’ படத்தின் இசையும் முன்னோட்டக்காட்சித் தொகுப்பும் வெளியாகி உள்ளது.

வெற்றி நடித்த படம் என்றால் கதையும் கதைக்களமும் மாறுபட்டதாக இருக்கும், தரமான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இதுவே தனக்கு கிடைத்துள்ள முதல் வெற்றி என்கிறார் வெற்றி.

அண்மையில் ‘பகலறியான்’ படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ‘பகலறியான்’ படத்தை உருவாக்கியதாக அதன் இயக்குநர் முருகன் தெரிவித்தார்.

மே 24ஆம் தேதி இந்தப்படம் உலகெங்கும் வெளியீடு காண உள்ளது.

இப்படம் முழுக்க முழுக்க இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளது என்றும் கதையைக் கேட்ட உடனேயே நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் நடிகர் வெற்றி தெரிவித்துள்ளார்.

“எனது நண்பர் கிஷோர் மூலமாகத்தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. கதையைக் கேட்டபோதே இது வெற்றிப்படமாக உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதனால்தான் தயக்கம் இன்றி நடிக்க ஒப்புக் கொண்டேன்.

“ஒளிப்பதிவாளர் அபிலாஷ் இந்தப் படத்திற்குப் பிறகு, பெரிய அளவில் பேசப்படுவார். பின்னணி இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எல்லோரும் படத்தின் பட்ஜெட்டை புரிந்துகொண்டு முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்,” என்கிறார் வெற்றி.

இதற்கிடையே, ‘ஆண் மகன்’ என்ற தலைப்பில் உருவாகும் புதுப் படத்தில் நடிக்க உள்ளார் வெற்றி. மகா கந்தன் இயக்குகிறார்.

“கிராமத்து தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான உறவையும் ஊடலையும் விவரிக்கும் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. நடிகர் பிரபு தந்தையாகவும் வெற்றி மகனாகவும் நடிக்கின்றனர்.

சென்னை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

“இது முழுநீள நகைச்சுவைப் படமாக உருவாகிறது. அப்பா கதாபாத்திரங்களில் பிரபுவின் நடிப்பு எவ்வளவு அருமையாக இருக்கும் என்பது தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். அவரைப் போன்றவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எல்லாருக்கும் அமைந்துவிடாது. என்னுடைய அதிர்ஷ்டத்தால் அவருடன் நடிக்கிறேன்,” என்கிறார் வெற்றி.

முன்னதாக ‘பகலறியான்’ படம் சில சிக்கல்கள் காரணமாக உரிய நேரத்தில் வெளியீடு காணாது என்ற தகவல் கோடம்பாக்கத்தில் பரவியது. இதனால் அப்படத்தின் கதாநாயகி அக்சயா மிகுந்த வருத்தமடைந்தார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசியபோது அவர் திடீரெனக் கண்ணீர் சிந்தியது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

“இயக்குநர் முருகன் எனது மூத்த சகோதரரைப் போன்றவர். இந்தப் படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளார். என் திறமையை நம்பி இப்படத்தின் நாயகியாக நடிக்க வாய்ப்பளித்தார்.

“இப்படம் இரவு நேரத்தில் நடக்கும் கதையை வைத்து உருவானதால் அனைவரும் கடுமையாக உழைத்தோம். எனக்கு இது கனவுப்படம் போன்றது. இரண்டு ஆண்டுகால உழைப்புக்குப் பிறகு வெளிவரும் இப்படம் குறித்து அனைவரும் நியாயமாக விமர்சிக்க வேண்டும். சற்றே தாமதமாக வெளிவந்தாலும் எனக்கு வாழ்க்கை தரக்கூடிய படம் இது.

“வெளியீட்டில் ஏற்பட்ட சிறு தாமதம் என்னை நிலைகுலைய வைத்துவிட்டது,” என்று சொல்லும்போதே அக்சயாவின் கண்களில் கண்ணீர் குளம்கட்டிவிட்டது.

அதன் பிறகு தன்னை சுதாரித்துக்கொண்டு பேசிய அவர், படத்தின் நாயகன் வெற்றி மாறுபட்ட நடிப்பை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்