தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நகைச்சுவை நடிகர்களைக் குறைவாக எடை போடாதீர்’

3 mins read
c785cef1-f1a8-4873-860e-69354a0f988b
‘கருடன்’ படத்தில் சூரி. - படம்: ஊடகம்

நகைச்சுவை நடிகர்களைக் குறைவாக எடை போட்டுவிடக்கூடாது என்கிறார் சிவகார்த்திகேயன்.

எத்தகைய வேடமாக இருந்தாலும் நகைச்சுவை நடிகர்கள் எளிதில் நடித்துவிடுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

துரை செந்தில் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கருடன்’ திரைப்படம். இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, சசிகுமார் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

எதிர்வரும் 31ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியீடு காண உள்ளது.

இந்நிலையில், சென்னையில் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியது. அதில் இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய துரை செந்தில்குமார், படத்தை இயக்கியது தாம் என்றாலும் யுவன் சங்கர் ராஜாதான் தனது இசையின் மூலம் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகப் பாராட்டினார்.

“எனது முந்தைய படங்களில் உள்ள நிறை, குறைகள் உட்பட பல்வேறு அம்சங்களைத் தெரிந்துகொண்டு இப்படத்தை இயக்கி உள்ளேன். படம் நிச்சயம் ரசிகர்களுக்கு மனநிறைவு தரும்,” என்றார் துரை செந்தில்குமார்.

அடுத்து பேசிய விஜய் சேதுபதி, சூரி நல்ல உழைப்பாளி என்றார்.

“நானும் சூரியும் சில படங்களில்தான் இணைந்து நடித்துள்ளோம். ‘விடுதலை’ படத்துக்குப் பிறகு வெளியாகிறது ‘கருடன்’.

“அதன் பின்னர் ‘கொட்டுக்காளி’ படம் என வரிசையாக நடித்து வருகிறார் சூரி. அவரை இயற்கையும் கடவுளுமாகச் சேர்ந்து ஆசீர்வதிப்பார்கள்,” என்றார் விஜய் சேதுபதி.

இயக்குநர் சசிகுமார், இந்தப் படத்தில் கடைசியாக இணைந்தது தாம்தான் என்றார்.

“இப்படிப்பட்ட கதையில் நான் பங்கேற்க மாட்டேன் என்று சிலர் நினைத்தனர். மீண்டும் இயக்குநர் பாதையில் செல்வேன் என்றும் கணக்கிட்டனர்.

“ஆனால் மற்ற அனைத்து காரணங்களையும்விட சூரிக்காக இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டேன்.

“சூரியை மிகப் பெரிய நடிகனாக உருவாக்கி உள்ளார் வெற்றிமாறன். இப்படம் மிகச் சிறப்பாக உருவாகி உள்ளது,” என்று சசிகுமார் பாராட்டினார்.

இதையடுத்துப் பேசிய சிவகார்த்திகேயன், நகைச்சுவை நடிகர்களை வெகுவாகப் பாராட்டினார்.

உணர்வுபூர்வமான, அழுத்தமான கதாபாத்திரங்களை நகைச்சுவை நடிகர்கள் மிக எளிதாக நடித்துவிடுவார்கள் என்றும் மற்றவர்களால் நகைச்சுவை வேடங்களில் எளிதில் நடித்துவிட இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இவ்வாறு நான் சொல்வதற்கு சூரி அண்ணனே நல்ல உதாரணம். நானும் அவரும் ‘சீமராஜா’ படத்தில் நடித்தபோது சில கதைகளைத் தேர்வு செய்து கதாநாயகனாக நடிக்கப் பாருங்கள் என்று கேட்டுக்கொண்டேன். அவரோ வெகுவாகத் தயங்கினார்.

“சிறிது காலத்துக்குப் பின்னர் திடீரென என்னைத் தொடர்புகொண்டு பேசியபோது, இயக்குநர் வெற்றிமாறன் அளித்த வாய்ப்பு குறித்து அவர் தெரிவித்தார்.

“அப்படத்தில், ‘முதன்மைக் கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என வெற்றிமாறன் மிக எளிதாகக் கூறிவிட்டார். எனக்குத்தான் பதற்றமாக இருக்கிறது’ என்றார் சூரி.

“இது போன்ற வாய்ப்பு மீண்டும் எப்போது அமையும் என்று யாருக்கும் தெரியாது. எனவே கண்ணை மூடிக்கொண்டு இந்த வாய்ப்பை ஏற்று, வெற்றிமாறன் சொல்வதுபோல் நடியுங்கள் என்றேன்.

“இந்தப் படம் அனைத்து வகையிலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார் சிவகார்த்திகேயன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ படத்தில் நாயகனாக நடித்தார் சூரி. அதன் பின்னர் இவரது சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. அதன் பலனாக தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். அவரது நடிப்பு விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்