நான்கு ஆண்டு இடைவேளைக்குப் பிறகு இசையமைப்பாளராகப் பணியாற்றியதாகவும் ‘அரண்மனை-4’ படத்தின் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் சொல்கிறார் ஹிப்ஹாப் ஆதி.
தற்போது கார்த்திக் இயக்கத்தில் ‘பி.டி. சார்’ படத்தில் நடித்துள்ள இவர், மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் நடித்தது நல்ல அனுபவங்களைத் தந்ததாகக் கூறுகிறார்.
“என் மீது மிகுந்த நம்பிக்கையை வைத்து பிரம்மாண்டமான படத்தைத் தயாரித்துள்ளார் ஐசரி கணேஷ். இதற்காக அவருக்குத்தான் முதலில் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
“இந்தப் படத்தின் முதல் பாதியில் நகைச்சுவை, மற்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாதி மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கும்.
“அதேசமயம் இறுதிக்காட்சி ரசிகர்களுக்கு மனநிறைவு அளிக்கும் என உறுதியாக நம்புகிறேன். இப்படத்துக்கான கதையை தயாரிப்பாளர் ஒப்புக்கொள்வார் என நினைக்கவே இல்லை. எனினும், முழுக் கதையையும் கேட்ட பிறகு, இந்தக் கதையில் உள்ள கருத்துகளை நாம்தான் சமூகத்துக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று தயக்கமில்லாமல் சொன்னார்.
“அவர் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தைத் தயாரிக்க இயலும். ஆனால், இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்த ஒரு காரணத்துக்காகவே அவருக்கு பலமுறை நன்றி சொல்ல வேண்டும்.
“இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் தரமான படைப்பாக உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்கும் ஒரு நல்ல குடும்பத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது,” என்று தனது அனுபவங்களை விவரிக்கிறார் ஆதி.
தொடர்ந்து அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு படத்தில் ஒப்பந்தமான பின்னர் தனது முழுக் கவனத்தையும் அதன் மீது மட்டுமே செலுத்துவது இவரது வழக்கமாம்.
இதன் காரணமாகவே தம்மால் அதிக படங்களில் நடிக்க முடியாமல் போகிறது என்கிறார்.
“நடிப்பு, இசையமைப்பு என இரண்டு பணிகளை விடாமல் செய்து வருகிறேன். நடிப்பு, இசை என எதுவும் இருப்பினும் அதற்காக நிறைய மெனக்கெடுகிறேன்.
“ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு அது குறித்து நன்கு தெரிந்துகொள்ள விரும்புவேன்.
“கதைக்கு ஏற்றபடி சில விளையாட்டுகளைக் கற்றுக்கொண்டது, குதிரையேற்றம் பயின்றது, ஹாக்கி பயிற்சி பெற்றது என நான் பலவிதமாக மெனக்கெட்டது ரசிகர்களுக்குத் தெரியும்,” என்று சொல்கிறார் ஆதி.
“ஆதியும் ‘பி.டி.சார்’ படக்குழுவினரும் சமுதாயத்துக்குத் தேவையான சில நல்ல கருத்துகளை படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். இதற்கு படத்தின் தயாரிப்பாளரும் முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது,” என சமூக ஊடகங்களில் பலர் தெரிவித்துள்ளனர்.
“பள்ளியில் உடற்பயிற்சி ஆசியராக வரும் ஆதி, ஒரு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளாவதைக் கண்டு அவருக்காக குரல் கொடுக்கிறார்.
“இறுதியில் அவர் அம்மாணவிக்கு நீதி பெற்றுத் தந்தாரா என்பதுதான் ‘பி.டி.சார்’ படத்தின் கதை,” என்று பட வெளியீட்டுக்கு முன்பே சிலர் ஆருடம் தெரிவித்தனர்.
ஆனால், படத்தின் கதை வெளியாவது குறித்து ‘பி.டி.சார்’ படக்குழுவினர் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.
“நல்ல படைப்பு என்றால் தமிழ் ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தெரிவிப்பார்கள்,” என்று படக்குழுவினர் தெளிவாகப் பேசுகின்றனர்.

