சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 4’ திரைப்படம் இந்த மே மாதம் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதை அடுத்து, இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ல் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை படத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக 2016, 2021ஆம் ஆண்டுகளில் முறையே ‘அரண்மனை 2’, ‘அரண்மனை 3’ படங்கள் வெளியாகின.
இதைத்தொடர்ந்து இப்படத்தின் 4வது பாகத்தை சுந்தர்.சி இயக்கி, நடித்திருந்தார். தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் நடித்திருந்த இப்படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார்.
குழந்தைகளையும் குடும்பத்தினரையும் இலக்காகக் கொண்டு வெளியான ‘அரண்மனை 4’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவரும் சூழலிலும் உலகம் முழுவதும் வசூலைக் குவித்து வருகிறது.

