ஆரம்பமே அதிர்ஷ்ட வாய்ப்பு கிட்டியது: தேஜு அஸ்வினி

2 mins read
16d6d721-41aa-4eb7-9aac-0f42ec86e3e4
நடிகை தேஜு அஸ்வினி. - படம்: ஊடகம்

திரையுலகில் நாயகிக்குத் தோழி, தங்கை போன்ற வேடங்களில் அறிமுகமான பின்னர்தான் நாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிட்டும். ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே நாயகியாக நடிக்க வாய்ப்பு கிட்டும். அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு தனக்குக் கிட்டியதாகக் கூறுகிறார் நடிகை தேஜு அஸ்வினி.

சினிமாவுக்குத் தான் புதிது என்பதால் அதிகம் கற்றுக்கொண்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

“தொடர்ந்து திரையுலக வாய்ப்புகள் அதிகம் வந்து கொண்டுள்ளன. ஆனால், சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படங்களில், வித்தியாசமான வேடங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை.

“அதனால், நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்துவருகிறேன்,” என்கிறார் தேஜு அஸ்வினி.

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின்மூலம் பிரபலமான தேஜு அஸ்வினி, ‘என்ன சொல்லப் போகிறாய்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அண்மையில் தமிழக ஊடகத்துக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், “என் பூர்வீகம் ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஒரு கிராமம். சென்னைக்கு சிறுவயதிலே குடிபெயர்ந்தோம். அப்பா தெலுங்கு சினிமாவில் இசைக்கலைஞராகப் பணியாற்றுகிறார்.

“நான் சென்னையில்தான் எம்.ஏ., படித்துள்ளேன். நடனமாடுவது எனது விருப்பமான பொழுதுபோக்கு. பேட்மிட்டன், த்ரோபால், கோகோ, ஹாக்கி விளையாட்டுகளிலும் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றுள்ளேன்,” என்கிறார் தேஜு அஸ்வினி.

2018ல் முதன்முதலாக ‘கல்யாண சமையல் சாதம்’ இணையத் தொடரில் நடித்தேன். அது கொரோனா காலத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, என்னை பலரும் அடையாளம் காண ஆரம்பித்தனர். எனது குடும்பத்தினரும் எனக்கு ஊக்கம் அளித்தனர்.

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் நாயகியாக நடிப்பதற்கு கிட்டிய வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டேன். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதையடுத்து ஜி.வி.பிரகாஷுடன் ‘பிளாக் மெயில்’ படத்தில் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

அடுத்து ‘மூன்றாம் கண்’ என்ற படம் முடிந்துள்ளது. ஆனால், இன்னும் வெளிவரவில்லை. இதிலும் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். எல்லா நாயகன்களுடனும் ஜோடி சேர்ந்து நடிப்பதற்கு ஆசை உள்ளது என்கிறார் தேஜு அஸ்வினி.

குறிப்புச் சொற்கள்